ஜம்ஷெட் சதம்; பாகிஸ்தான் வெற்றி
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான்


இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி கண்டது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் நசிர் ஜம்ஷெட் 132 பந்துகளில் ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 101 ரன்கள் குவித்து வெற்றிக்கு வழிவகுத்தார்.
முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் 48.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்தது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சேவாக் மீண்டும் அணிக்குத் திரும்பியதால் அஜிங்க்யா ரஹானே நீக்கப்பட்டார். பாகிஸ்தான் அணியில் உமர் அக்மலுக்குப் பதிலாக ஷோயிப் மாலிக் சேர்க்கப்பட்டார்.
சரிவுக்குள்ளான இந்தியா: சனிக்கிழமை பெய்த மழையின் காரணமாக மைதானம் ஈரப்பதமாகக் காணப்பட்டது. இதனால் ஆட்டம் ஒரு மணி நேரம் தாமதமாகவே தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக், பீல்டிங்கைத் தேர்வு செய்தார்.
இர்ஃபான் வீசிய முதல் ஓவரை மெய்டனாக்கினார் கம்பீர். ஜுனைத் கான் வீசிய 4-வது ஓவரின் 5-வது பந்தில் சேவாக்கிற்கு மிடில் ஸ்டெம்ப் பறந்தது. அவர் 11 பந்துகளில் 4 ரன்கள் எடுத்தார். முகமது இர்ஃபான் வீசிய 5-வது ஓவரில் கம்பீரும் ஸ்டெம்பை பறிகொடுத்தார். அவர் 8 ரன்களே எடுத்தார்.
ஜுனைத் கான் வீசிய 6-வது ஓவரில் கோலி ரன் ஏதுமின்றியும், யுவராஜ் சிங் 2 ரன்களிலும் கிளீன் போல்டு ஆகினர். இதன்பிறகு வந்த ரோஹித் சர்மா 4 ரன்களில் வெளியேற 10 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 29 ரன்கள் என்ற பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டது.
ரெய்னா 48: இதன்பிறகு ரெய்னாவுடன் இணைந்தார் கேப்டன் தோனி. இக்கட்டான சூழலில் இவர்கள் இருவரும் சிறப்பாக ஆடியதால், அணியின் சரிவு தடுத்து நிறுத்தப்பட்டது. இந்தியா 102 ரன்களை எட்டியபோது இந்த ஜோடி பிரிந்தது. ரெய்னா 88 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு தோனியுடன் இணைந்தார் அஸ்வின்.
இந்தியா விரைவாக ஆட்டமிழந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில், தோனி-அஸ்வின் ஜோடி சிறப்பாக ஆட இந்தியா சரிவிலிருந்து மீண்டது. தான் சந்தித்த 79-வது பந்தில் முதல் பவுண்டரியை அடித்த தோனி, உமர் குல் வீசிய 41-வது ஓவரின் 2-வது பந்தில் பவுண்டரி அடித்ததன் மூலம் 86 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
தோனி சதம்: மறுமுனையில் அஸ்வின் ஒன்றிரண்டு ரன்களைச் சேர்க்க, தோனி சதத்தை நெருங்கினார். முகமது இர்ஃபான் வீசிய 49-வது ஓவரில் தொடர்ந்து இரு பவுண்டரிகளையும், ஒரு சிக்ஸரையும் விளாசிய தோனி, ஒருநாள் போட்டியில் 8-வது சதத்தைப் பூர்த்தி செய்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் குவித்தது. தோனி 125 பந்துகளில் 3 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 113, அஸ்வின் 39 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 31 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் ஜுனைத் கான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதிர்ச்சி தொடக்கம்: பின்னர் பேட் செய்த பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அறிமுக வீரரான புவனேஷ் குமார் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே ஸ்டெம்பை பறிகொடுத்தார் ஹபீஸ்.
பந்து வெளியில் செல்வதாக நினைத்து ஹபீஸ் தொடாமல் இருக்க, அது இன்ஸ்விங் ஆகி ஸ்டெம்பை தகர்த்தது. பின்னர் வந்த அசார் அலி 9 ரன்களில் வெளியேற, மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான நசிர் ஜம்ஷெட்டுடன் இணைந்தார் யூனிஸ் கான்.
ஜம்ஷெட் சதம்: யூனிஸ் கான், வழக்கம்போல் தனக்கே உரிய பாணியில் சரியான பந்துகளைத் தேர்வு செய்து பவுண்டரிக்கு விரட்டினார்.
இதனால் பாகிஸ்தானின் ரன் வேகம் உயர்ந்தது. ஜம்ஷெட் 76 பந்துகளில் அரைசதம் கண்டார். இதைத் தொடர்ந்து யூனிஸ் கானும் சிக்ஸர் அடித்து 53 பந்துகளில் அரைசதத்தைக் கடந்தார். அவர் 58 ரன்கள் எடுத்திருந்தபோது திண்டா பந்துவீச்சில் அஸ்வினால் அற்புதமாகக் கேட்ச் செய்யப்பட்டார். இதையடுத்து மிஸ்பா உல் ஹக் களம்புகுந்தார்.
அந்த அணி 172 ரன்களை எட்டியபோது 16 ரன்கள் எடுத்திருந்த மிஸ்பா ஆட்டமிழந்தார். இதையடுத்து ஷோயிப் மாலிக் களம்புகுந்தார்.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஜம்ஷெட் 127 பந்துகளில் சதம் கண்டார். இது அவருக்கு 2-வது சதம் ஆகும். இறுதியில் அந்த அணி 48.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. மாலிக் 35 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஆட்டநாயகன்: இந்திய முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியபோதும் தனி மனிதராகக் களத்தில் நின்று சதமடித்து அணியின் ஸ்கோரை உயர்த்திய தோனி ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
தோனியின் 7-ம் எண் சென்டிமென்ட்
இந்த ஆட்டத்தில் 7-ம் எண் கொண்ட ஜெர்சியை அணிந்து விளையாடினார் தோனி. இதில் 7-ம் நிலை வீரராக களமிறங்கிய தோனி, 95 ரன்கள் எடுத்திருந்தபோது ஒருநாள் போட்டியில் 7 ஆயிரம் ரன்களைக் கடந்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டியில் 7 ஆயிரம் ரன்களைக் கடந்த 7-வது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். மேலும் இந்த ஆட்டத்தில் அவர் 7 பவுண்டரிகளை விளாசினர். மொத்தத்தில் இந்த ஆட்டத்தில் 7-ம் எண் அவருக்கு ராசியானதாக அமைந்தது என்றாலும் வெற்றி மட்டும் வசமாகாமல் போய்விட்டது. இந்திய அணிக்கு எப்போதுமே ஆபத்தான சூழலில் கை கொடுக்கும் கேப்டன் தோனி, இந்த ஆட்டத்திலும் அதை செய்யத் தவறவில்லை. 5 விக்கெட் இழப்புக்கு 29 ரன்கள் எடுத்து தடுமாறிய இந்தியாவை சரிவிலிருந்து மீட்டதோடு, பாகிஸ்தானுக்கு போட்டியளிக்கக்கூடிய ஸ்கோரை எட்டவும் உதவினார். தனிநபராகப் போராடிய தோனி, 8-வது சதத்தைப் பூர்த்தி செய்தார். இது அவருக்கு 212-வது போட்டியாகும். முன்னதாக தோனி 16 ரன்கள் எடுத்திருந்தபோது ஹபீஸ் பந்தில் கொடுத்த கேட்ச்சை பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக் கோட்டைவிட்டார். அதனால் வாழ்வுபெற்ற தோனி, சதமடித்து சாதித்தார்.
பாகிஸ்தான் ரசிகர்கள் வரவில்லை
சென்னை ஆட்டத்துக்கு பாகிஸ்தான் ரசிகர்கள் யாரும் வரவில்லை. முன்னதாக சென்னை போட்டிக்கு தங்கள் நாட்டு ரசிகர்களுக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் டிக்கெட் கேட்டிருந்தது. எனினும் பின்னர் தங்கள் நாட்டு ரசிகர்களின் வருகையை பாகிஸ்தான் உறுதி செய்யவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஜாகா அஷ்ரப், முன்னாள் வீரரும், இந்தத் தொடருக்கான நல்லெண்ணத் தூதருமான சாதிக் முகமது, பைசலாபாத் கிரிக்கெட் சங்க தலைவர் செüத்ரி அன்வர் உள்ளிட்ட சில முக்கிய நிர்வாகிகள் மட்டுமே வந்திருந்தனர். இவர்கள் அனைவரும், பிசிசிஐ தலைவர் சீனிவாசனுடன் அமர்ந்து போட்டியை ரசித்தனர்.
போட்டித் துளிகள்...
* இந்த ஆட்டத்தில் தோனி-அஸ்வின் ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 101 பந்துகளில் 125 ரன்கள் சேர்த்தது. இதுதான், 7-வது விக்கெட்டுக்கு இந்திய ஜோடி எடுத்த அதிகபட்ச ஸ்கோர்.
* தோனி அடித்த சதம், சென்னை மைதானத்தில் அடிக்கப்பட்ட 11-வது சதம். சென்னையில் தோனி அடித்த 2-வது சதம் இது.
* முகமது இர்ஃபான் தனது கடைசி ஓவரில் மட்டுமே 21 ரன்களை வாரி வழங்கினார்.
* மழை காரணமாக காலையில் ஆட்டம் தாமதமாகத் தொடங்கியபோது ரசிகர்கள் கூட்டம் வரவில்லை. எனினும் போகப்போக ரசிகர்கள் கூட்டத்தால் மைதானம் களைகட்ட ஆரம்பித்தது. 33 ஆயிரம் ரசிகர்கள் மைதானத்திற்கு வந்திருந்தனர்.
* இந்திய அணியின் 5 முன்னணி பேட்ஸ்மேன்களை பாகிஸ்தான் தொடக்கத்திலேயே வெளியேற்றினாலும், ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் தோனி, ரெய்னா, அஸ்வின் ஆகியோரை எளிதாக வீழ்த்த முடியவில்லை. இந்த 3 பேரும் ஜோடி சேர்ந்து 198 ரன்கள் சேர்த்தனர்.
* இந்த ஆட்டத்தில் தோற்றதன் மூலம் சென்னையில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான 2 ஆட்டங்களிலும் தோல்வியைத் தழுவியுள்ளது இந்திய அணி. முன்னதாக 1997-ல் இங்கு நடைபெற்ற போட்டியில் இந்தியாவை வீழ்த்தியுள்ளது பாகிஸ்தான். அதில் அன்வர் 194 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
சுருக்கமான ஸ்கோர்
இந்தியா-227/6
(தோனி 113*, ரெய்னா 43, ஜுனைத் கான் 4வி/43, முகமது ஹபீஸ் 1வி/26)
பாகிஸ்தான்-228/4
(நசிர் ஜம்ஷெட் 101*, யூனிஸ் கான் 58,
புவனேஷ் குமார் 2வி/27,
இஷாந்த் சர்மா 1வி/39)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...