

ஆட்டத் திறனால் மட்டுமல்லாது, தனது எளிமையான அணுகுமுறையாலும் அனைவராலும் அறியப்பட்டவர் ராகுல் திராவிட். கிரிக்கெட்டை மேலோட்டமாகப் பார்க்காமல், நுணுக்கமாகப் பார்த்து ரசிக்கும் அனைவராலும் பாராட்டப்பட்டவர்.
கிரிக்கெட் வெகுவேகமாக வணிகமயமாகி வரும் இக்காலத்தில், தனிப்பட்ட சாதனைகளுக்காக அல்லாமல் அணிக்காக மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் விளையாடி வந்த அவரை எளிதில் மறந்து விட முடியாது.
"ஜென்டில்மேன்' விளையாட்டு என்று வர்ணிக்கப்படும் கிரிக்கெட்டில் உண்மையாகவே ஜென்டில்மேனாக நடந்து கொண்ட ஒரு சிலரில் திராவிட் முக்கியமானவர். பேட்ஸ்மேனாக அனைத்து வித "ஷார்ட்'களை சரியாகத் தெரிந்தவரும், கிரிக்கெட்டை இலக்கண சுத்தமாக விளையாடியவரும் திராவிட்தான்.
டெஸ்ட் விளையாடும் 10 நாடுகளுக்கு எதிராக அந்தந்த நாடுகளிலேயே சதமடித்த ஒரே வீரர். டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்ச கேட்சுகளை (210) பிடித்த பீல்டர் என்ற சாதனைகளைத் தனதாக்கியவர்.
18 வெவ்வேறு வீரர்களுடன் கூட்டாக 80 முறை 100 ரன்களுக்கு மேல் எடுத்தவர். சச்சினுடன் கூட்டாக 19 முறை 100 ரன்களுக்கு மேல் எடுத்தவர் என்ற சாதனையும் அவருக்கு உரியது.
பேட்ஸ்மேனாக மட்டுல்லாது பீல்டர், விக்கெட் கீப்பர், பந்து வீச்சு என அனைத்துத் துறைகளிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார்.
1973-ல் மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் பிறந்த அவர், கர்நாடக மாநிலம் பெங்களூரில் வளர்ந்தார். 12 வயதில் கிரிக்கெட் பேட்டை கையில் எடுத்த அவர், கர்நாடக மாநிலத்துக்காக 15-வயது, 17-வயது, 19-வயதுக்குள்பட்டோருக்கான போட்டிகளில் பங்கேற்றார்.
1991-ல் கல்லூரி மாணவராக இருந்த திராவிட், முதல்முறையாக ரஞ்சி கோப்பை போட்டியில் கர்நாடக அணியில் இடம் பெற்று மகாராஷ்டிர அணிக்கு எதிராக விளையாடினார்.
1996-ல் இலங்கை அணிக்கு எதிராக தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் திராவிட் களமிறங்கினார். ஆனால் அப்போட்டியில் 3 ரன்களை மட்டுமே எடுத்தார். அதே ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் களம் கண்ட திராவிட் அதில் 95 ரன்கள் எடுத்து முத்திரை பதித்தார்.
இதையடுத்து தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர், 1999 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்ற இந்திய அணியில் இடம் பிடித்தார். தனது முதல் உலகக் கோப்பை போட்டியில் இரு சதத்துடன் 461 ரன்கள் குவித்தார். இதுவே அந்த உலகக் கோப்பையில் தனிப்பட்ட ஒரு வீரரின் அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது.
2003 உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய இந்திய அணியில் திராவிட் துணை கேப்டனாக இருந்தார். அப்போது இந்தியா இறுதிச் சுற்று வரை முன்னேறியது. 2005-ம் ஆண்டில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
அவரது தலைமையில் இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளிலும், இங்கிலாந்திலும் டெஸ்ட் தொடரை வென்றது. 2007-ல் திராவிட் தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பை போட்டியில் களம் கண்டது. ஆனால் இந்திய அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது. இது திராவிட்டின் ஒருநாள் போட்டி வரலாற்றில் பின்னடைவாக அமைந்தது.
அதே நேரத்தில் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினார். 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மொத்தம் 31,258 பந்துகளை எதிர்கொண்டுள்ளார். டெஸ்ட் போட்டியில் இதுவும் ஒருசாதனைதான். ஏனெனில் வேறு எந்த வீரரும் டெஸ்ட் போட்டியில் ஒட்டுமொத்தமாக 29 ஆயிரம் பந்துகளுக்கு மேல் எதிர்கொண்டது இல்லை.
டெஸ்டுகளில் 13,288 ரன்கள் எடுத்து அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் சச்சினுக்கு அடுத்த இடத்தில் உள்ளார். வெளிநாடுகளில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தடுமாறியபோதெல்லாம், தோள் கொடுத்து அணியை சரிவில் இருந்து மீட்டவர்.
2001-ல் கொல்கத்தாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பாலோ-ஆன் பெற்ற பின்னும் வெற்றி பெற்றது. இதில் லட்சுமணனுடன் (281 ரன்கள்) இணைந்து திராவிட் 180 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததை எளிதில் மறக்க முடியாது.
2002-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக 3 சதம், மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக 1 சதம் என தொடர்ந்து 4 போட்டிகளில் அவர் சதமடித்தார்.
2003-04-ல் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதங்களை விளாசினார். அப்போது அடிலெய்டில் நடைபெற்ற டெஸ்டில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 556 ரன்கள் குவித்தது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் என்ற நிலையில் இருந்தபோது, திராவிட் தனியொருவராகப் போராடி 233 ரன்கள் எடுத்தார். அப்போது அன்னிய மண்ணில் இந்திய வீரர் எடுத்த அதிகபட்ச ஸ்கோரும் அதுதான். அந்தப் போட்டியில் இந்தியா வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி பெற்றது.
சமீபத்தில் இங்கிலாந்து சென்ற இந்திய அணி பங்கேற்ற 4 டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியடைந்த நிலையிலும் 3 சதங்கள் அடித்து ஆறுதல் தந்தவர் திராவிட்.
அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ விருதுகளுடன் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விஸ்டன் விருது, ஐ.சி.சி. அணியின் கேப்டன், ஐ.சி.சி.யின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருது ஆகிய கெüரவத்தையும் பெற்றுள்ளார்.
தனது இடத்தில் பல இளம் வீரர்கள் வர வேண்டும் என ஓய்வு அறிவிப்பின்போது திராவிட் கூறியுள்ளார். எனினும் சச்சின் கூறியுள்ளதுபோல திராவிட் போல யாருமில்லைதான். இப்போதைய நிலையில் அவரது இடத்தை மற்றொரு வீரர் நிரப்புவது என்பதும் எளிதான விஷயமல்ல.
* இந்திய அணி 25 டெஸ்ட் போட்டிகளில் திராவிட் தலைமையில் விளையாடியுள்ளது. இதில் வெற்றி 8, தோல்வி 6, டிரா 11.
* உள்நாட்டில் 70 டெஸ்ட் போட்டிகளிலும், வெளிநாடுகளில் 94 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். உள்நாட்டு போட்டிகளில் 5,598 ரன்களும் (சராசரி 51.35), வெளிநாடுகளில் 7,690 ரன்களும் (சராசரி 53.03) எடுத்துள்ளார்.
* டெஸ்ட் போட்டியில் இருமுறை இரு இன்னிங்ஸ்களிலும் சதமடித்துள்ளார். காவஸ்கர், ரிக்கி பாண்டிங் ஆகியோர் 3 முறை இரு இன்னிங்ஸ்களிலும் சதமடித்துள்ளனர்.
* விக்கெட் கீப்பராக அல்லாமல், டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக 210 கேட்ச்களை பிடித்த ஒரே வீரர்.
* இங்கிலாந்து மண்ணில் அந்தநாட்டுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக 6 சதங்கள் அடித்த ஒரே இந்திய வீரர் திராவிட்தான்.
* டெஸ்ட் போட்டியில் அவரது 36 சதங்களில் 21 அன்னிய மண்ணில் எடுக்கப்பட்டவை.
போட்டி இன்னிங்ஸ் ரன்கள் அதிகபட்சம் சராசரி சதம் அரைசதம் கேட்ச்
டெஸ்ட் 164 286 13,288 270 52.31 36 63 210
ஒருநாள் 344 318 10,889 153 39.16 12 83 196
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.