

இந்திய அணியின் வெற்றிகரமாக கேப்டனாக விளங்கிய தோனி, சில தொடர் தோல்விகளால் இப்போது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார். சமீபத்தில் முடிவடைந்த 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி சாதிக்க முடியாமல் போனதால் அவர் மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. இனி மேலும் அவர் கேப்டனாக தொடர வேண்டுமா என்று கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.
2007ஆம் ஆண்டு செப்டம்பரில் முதல்முறையாக 20 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்ற இந்திய அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டார் தோனி. அறிமுக ஆண்டிலேயே 20 ஓவர் உலகக் கோப்பையை இந்தியா வென்றது. அதே ஆண்டில் ஒரு நாள் கிரிக்கெட் அணிக்கும் கேப்டனாக உயர்ந்தார் தோனி. 2008 நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கடைசி ஆட்டத்தில் கும்ப்ளே விலகியதால் தோனி கேப்டன் ஆனார். இதன் மூலம் 20 ஓவர், ஒருநாள் கிரிக்கெட், டெஸ்ட் என மூன்று போட்டிகளுக்கும் கேப்டனாக உயர்ந்தார். அவர் இந்திய அணியின் கேப்டனாக பதவியேற்று 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
20 ஓவர் உலகக் கோப்பை, ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் வங்கி ஒருநாள் கிரிக்கெட் போட்டி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கவாஸ்கர் - பார்டர் டெஸ்ட் தொடர் ஆகியவை தோனியின் தலைமையில் இந்திய அணி பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிகள். 1990ஆம் ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடிப்பது என்பது கனவாகவே இருந்தது. தோனி தலைமையிலான அணிதான் அதனை சாதித்தது. இந்தியா உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கோடானுகோடி கிரிக்கெட் ரசிகர்களின் பல ஆண்டுகால ஆசையை தோனி தலைமையிலான இந்திய அணிதான் நிறைவேற்றியது.
கங்குலி கேப்டனாக இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வலுப்படுத்திய சிறப்பான அணியை தோனி பெற்றார். இதன் மூலமே அவரது தலைமையில் இந்திய அணி தொடர்ந்து வெற்றிகளைக் குவித்தது என்று விமர்சிப்பவர்களும், தோனிக்கு இருந்த அதிர்ஷ்டத்தால்தான் வெற்றிகள் கிடைத்தன என்று விமர்சிப்பவர்களும் உண்டு. ஆனால் இதுவரை இருந்த கேப்டன்களில் சிறந்த தலைமைப் பண்பு உடையவர் தோனி என்பதை எவ்விதத்திலும் மறுக்க முடியாது.
கிரிக்கெட் என்பது ஒரு குழு விளையாட்டு என்பதை மறந்து தனிநபரின் சாதனைகளைப் போற்றியும், ஒரு சில குறிப்பிட்ட வீரர்கள் சிறப்பாக விளையாடினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற மனநிலையில் ஊறிப்போனதுமே தவறான விமர்சனங்களுக்குக் காரணம்.
ஒரு காலத்தில் கவாஸ்கர், அதன் பின்னர் சச்சின் ஆட்டமிழந்துவிட்டால், முடிந்தது இந்திய அணி என்று கூறி டி.வி.யை மூடிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றதை மறந்துவிட முடியாது. ஆனால் இப்போது நிலைமை அப்படியில்லை. அணியின் வெற்றி எந்த ஒரு தனி வீரரையும் சார்ந்து இல்லை. வெற்றியில் ஒவ்வொரு வீரரின் பங்களிப்பும் உள்ளது.
அணியின் கேப்டன் என்பவர் சிறந்த வீரராக இருந்தால் மட்டும் போதாது, சகவீரர்களை அரவணைத்துச் செல்லுதல், நெருக்கடியான சூழ்நிலைகளில் பதற்றப்படாமல் முடிவெடுத்தல், மைதானத்தில் ஆவேசத்தையும், ஆக்ரோஷத்தையும் வெளிப்படுத்தாமல் நிதானமாகச் செயல்படுவது, சூழ்நிலைக்கு ஏற்ப வீரர்களை பயன்படுத்திக் கொள்வது, வெற்றியின்போது தலைக்கனம் கொள்ளாமலும், தோல்வி ஏற்பட்டால் துவண்டு விடாத மனப்பக்குவமும் வேண்டும். இப்பண்புகள் அனைத்தும் ஒருங்கே இணைந்தவர் தோனி.
கேப்டனாக இருப்பவர் எடுக்கும் முடிவுகளும், மைதானத்தில் கையாளும் உத்திகளும் எப்போதுமே சரியாக பலனளிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தபோதிலும், இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களை இழந்து தரவரிசையில் பெரும் சரிவைச் சந்தித்தபோதிலும், தோனி கூறிய பதில் ஒன்றுதான், "தரவரிசை என்பது வெறும் எண்தான். அணி தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்' என்பதுதான்.
வெற்றி பெற்றால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதும், தோல்வியடைந்தால் தரையில் தூக்கிப் போட்டு மிதிப்பதும்தான் இந்தியாவில் சராசரி கிரிக்கெட் ரசனையாக உள்ளது. இதனை மாற்றி கிரிக்கெட்டை விளையாட்டாகப் பார்த்தால் மட்டுமே சரியாக விமர்சிக்க முடியும்.
நவம்பர் 15ஆம் தேதி தொடங்க இருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர், தோனிக்கு நடக்க இருக்கும் அக்னி பரீட்சை என்றே கூற வேண்டும்.
4 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட இத்தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது என்பது மட்டுமே சாதகமான அம்சம். மற்றபடி திராவிட், லட்சுமண் ஆகிய தலைசிறந்த டெஸ்ட் ஆட்டக்காரர்கள் அணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டது, சச்சின், சேவாக், கம்பீர் போன்ற வீரர்கள் "ஃபார்மில்' இல்லாதது பெரும் பின்னடைவு.
கடந்த கால டெஸ்ட் புள்ளி விவரங்களைப் பார்க்கும்போது இந்திய மண்ணில் நமது அணி சற்று போராடித்தான் இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளது. இங்கிலாந்து அணி இந்தியாவில் 51 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளது.
இதில் இந்தியா 14 முறையும், இங்கிலாந்து 11 முறையும் வென்றுள்ளன. 26 ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன. டெஸ்ட் தொடரைப் பொறுத்தவரையில் இந்தியாவில் நடைபெற்ற 13 டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து பங்கேற்றுள்ளது. இதில் இந்தியா 6 தொடரிலும், இங்கிலாந்து 4 தொடரிலும் வென்றுள்ளன. 3 தொடர்கள் டிராவில் முடிந்துள்ளன.
தவிர பீட்டர்சன், பெல், குக், பிரையர், காம்ப்டன் என சிறந்த வீரர்களைக் கொண்டுள்ளது இங்கிலாந்து அணி. பயிற்சி ஆட்டங்களில் சிறப்பாக விளையாடியுள்ள இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இந்திய அணிக்குக் கடும் சவாலாக இருப்பார்கள் என்பது உறுதி.
இந்திய அணி இங்கிலாந்து சென்றபோது 0-4 என்று டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்ததுடன், டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தையும் பறிகொடுத்து நாடு திரும்பியது. இப்போது அதற்குப் பதிலடியாக இங்கிலாந்துக்கு எதிராக 4-0 என்ற கணக்கில் இந்தியா வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்த டெஸ்ட் தொடரை வெல்வதன் மூலம்தான் இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் என்ற பெருமையை தோனி நிலைநிறுத்திக் கொள்ளவும், தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.