

கேலேவில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் ஷிகர் தவன், கோலி ஆகிய இருவரும் சதம் அடித்ததால் இந்திய அணி வலுவான நிலைமையில் உள்ளது.
3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேலேவில் புதன்கிழமை தொடங்கியது. அஸ்வினின் அபார பந்துவீச்சால் இலங்கை அணி, முதல் இன்னிங்ஸில் 183 ரன்களில் சுருண்டது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 34 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் சேர்த்தது. ஷிகர் தவன் 53 ரன்களுடனும், கோலி 45 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
2-ம் நாளான இன்றும் இந்த ஜோடி மிகப் பொறுப்பாக ஆடியது. 57-வது ஓவரில் பவுண்டரி அடித்து தனது சதத்தைப் பூர்த்தி செய்தார் தவன். உணவு இடைவேளையின் போது, இந்திய அணி 63 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்து 44 ரன்கள் முன்னிலை பெற்றது. தவன் 110, கோலி 86 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
அதன்பின்னர், 74-வது ஓவரில் விராட் கோலியும் பவுண்டரி அடித்து தனது சதத்தைப் பூர்த்தி செய்தார். பிறகு அவர் 103 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஆடவந்த ரஹானே ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். அதன்பிறகு அஸ்வின் (7), ஹர்பஜன் (14), மிஸ்ரா (10), ஆரோன் (4) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள். சஹா சிறப்பாக ஆடி 60 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில், 117.4 ஓவர்களில் 375 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கெளசல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 192 ரன்கள் முன்னிலை பெற்றது.
இன்னமும் மூன்று நாள்கள் மீதமுள்ள நிலையில், கடினமான இலக்குடன் ஆட வந்த இலங்கை அணி முதல் இரண்டு ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் (கருணாரத்னே, சில்வா) இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்கள். அஸ்வின், மிஸ்ரா ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட் எடுத்தார்கள்.
2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 5 ரன்களை எடுத்துள்ளது. சங்கக்காரா 1, தம்மிகா பிரசாத் 3 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இலங்கை அணி 187 ரன்கள் எடுத்தால் மட்டுமே இந்திய அணி மீண்டும் பேட்டிங் செய்யவேண்டியிருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.