முதல் டெஸ்ட்: சன்டிமால் அபார சதம்; இந்தியா 23/1

இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற இன்னும் 153 ரன்கள் தேவை...
முதல் டெஸ்ட்: சன்டிமால் அபார சதம்; இந்தியா 23/1
Updated on
2 min read

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 176 ரன்கள் என்கிற இலக்கை நிர்ணயித்துள்ளது இலங்கை அணி. அந்த அணியின் சன்டிமால் அபாரமாக ஆடி 162 ரன்கள் எடுத்து அணியைச் சரிவில் இருந்து காப்பாற்றினார்.

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேலேவில் புதன்கிழமை தொடங்கியது. அஸ்வினின் அபார பந்துவீச்சால் இலங்கை அணி, முதல் இன்னிங்ஸில் 183 ரன்களில் சுருண்டது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 375 ரன்கள் குவித்தது. இதனால் 192 ரன்கள் முன்னிலை பெற்றது. கடினமான இலக்குடன் ஆட வந்த இலங்கை அணி, 2-ம் நாள் ஆட்டமுடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 5 ரன்களை எடுத்தது. சங்கக்காரா 1, தம்மிகா பிரசாத் 3 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

3-ம் நாளான இன்றும் இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்ந்தது. இன்றைய ஆட்டத்தின் முதல் பந்திலேயே பிரசாத்தின் விக்கெட்டை (3 ரன்கள்) வீழ்த்தினார் ஆரோன். அதன்பிறகு ஜோடி சேர்ந்த சங்கக்காராவும் மேத்யூஸும் ஓரளவு தாக்குப் பிடித்து ஆடினார்கள். ஆனால், 25-வது ஓவரில் சங்கக்காராவின் விக்கெட்டைக் கைப்பற்றினார் அஸ்வின். சங்கக்காரா 39 ரன்கள் எடுத்தார். அடுத்த ஓவரில் 39 ரன்களில் மேத்யூஸ் ஆட்டமிழந்தார். அவருடைய விக்கெட்டை மிஸ்ரா வீழ்த்தினார். உணவு இடைவேளையின்போது இலங்கை அணி, 30 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்தது.

அதன்பிறகு இலங்கை அணி வீரர்கள் கடுமையாகப் போராட ஆரம்பித்தார்கள். இன்றைக்கே டெஸ்ட் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சன்டிமால் ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அவரும் திரிமானியும் அருமையான கூட்டணி அமைத்தார்கள். இந்த ஜோடி 125 ரன்கள் எடுத்தது. திரிமானி 44 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.  அதன்பிறகு 7-வது விக்கெட்டுக்கு சன்டிமாலும் முபாரக்கும் 82 ரன்கள் சேர்த்தார்கள். முபாரக் விக்கெட்டை ஹர்பஜன் சிங் வீழ்த்தினார்.

இறுதியில் 82.2 ஓவர்களில் 367 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இலங்கை அணி. 162 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார் சன்டிமால். இந்திய பவுலர்களில் அஸ்வின் 4, மிஸ்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இந்த டெஸ்ட் போட்டியில் மொத்தம் 10 விக்கெட்டுகள் எடுத்துள்ளார் அஸ்வின்.

176 ரன்கள் என்கிற இலக்குடன் தனது 2-வது இன்னிங்ஸைத் தொடங்கியது இந்திய அணி. 5-வது ஓவரில் ராகுலின் விக்கெட்டை வீழ்த்தினார் ஹெராத். ராகுல் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். நைட்வாட்ச்மேனாக இஷாந்த் சர்மா களமிறங்கினார். 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸில், 1 விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற இன்னும் 153 ரன்கள் தேவை. கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ளன. 

ரஹானே உலக சாதனை

மிகவும் விறுவிறுப்பாக செல்லும் இந்தப் போட்டியில் இலங்கை அணியின் 2-வது இன்னிங்ஸில் (73-வது ஓவரில்) ஹெராத்தின் கேட்ச்சை ரஹானே பிடித்தபோது ஓர் உலக சாதனை நிகழ்த்தப்பட்டது. டெஸ்ட் போட்டிகளில், இதுவரை விக்கெட் கீப்பர் அல்லாத எந்த ஒரு ஃபீல்டரும் 8 கேட்சுகளைப் பிடித்ததில்லை. ஹெராத்தின் கேட்சைப் பிடித்ததன் மூலம் அந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார் ரஹானே. இதற்கு முன்பு 5 வீரர்கள் டெஸ்ட் மேட்சில் 7 கேட்சுகள் பிடித்து முதலிடத்தில் இருந்தார்கள். அந்தச் சாதனையை ரஹானே முறியடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com