

ஐபிஎல் போட்டிகளிலிருந்து 2 ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தாக்கல் செய்துள்ள மனுவுக்குப் பதில் மனு தாக்கல் செய்ய பிசிசிஐக்கு அவகாசம் தரப்பட்டுள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. அதுதொடர்பாக விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி முத்கல் குழு, தனது அறிக்கையை கடந்த ஆண்டு தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை விதிப்பது குறித்து முடிவெடுக்க ஆர்.எம்.லோதா தலைமையிலான மூவர் குழுவை உச்ச நீதிமன்றம் கடந்த ஜனவரியில் நியமித்தது. 6 மாத கால விசாரணைக்குப் பிறகு தனது தீர்ப்பை லோதா குழு கடந்த ஜூலை 14-ஆம் தேதி அளித்தது. அந்தத் தீர்ப்பில், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள், ஐபிஎல் போட்டிகளில் இருந்து 2 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறியிருந்த விவரம்:
இடைநீக்க உத்தரவால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள வீரர்கள், பயிற்சியாளர்கள் உள்ளிட்டோர் பாதிப்படைந்துள்ளனர். இதுதவிர, குருநாத் மெய்யப்பனுக்கு இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தில் எந்தவிதப் பங்கும் இல்லை; அவர் சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரும் அல்ல. எனவே, நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான மூவர் குழு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். இதுதவிர, எங்கள் அணி ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் வகையில் அனுமதிக்குமாறு பிசிசிஐ-க்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டது.
இந்த மனு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பிகார் கிரிக்கெட் சங்கம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், இந்த வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் பிகார் கிரிக்கெட் சங்கத்தை மூன்றாவது எதிர் மனுதாரராகச் சேர்க்க உத்தரவிட்டனர். மேலும், இந்த மனு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு, இந்திய கிரிகெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), இந்தியா சிமென்ட்ஸ், பிகார் கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 27-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
பிசிசிஐக்கு அவகாசம்
நாளை (ஆகஸ்ட் 28-ம் தேதி) பிசிசிஐ- யின் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஐபிஎல் செயற்குழு அறிக்கை அளிக்க உள்ளது. இரு அணிகளுக்கும் விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுமா என்பது குறித்து அறிக்கையின் அடிப்படையில் நாளை முடிவெடுக்கப்படும்.
இந்நிலையில், தடையை எதிர்த்து சென்னை அணி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. நாளை நடக்கும் பிசிசிஐ கூட்டத்துக்கு தடை விதிக்கவேண்டும் என்று சென்னை அணி கோரிக்கை விடுத்தது. கூட்டத்துக்குத் தடை விதிக்க மறுத்த நீதிமன்றம், விசாரணையை செப்டம்பர் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தாக்கல் செய்துள்ள மனுவுக்குப் பதில் மனு தாக்கல் செய்ய பிசிசிஐக்கு அவகாசம் தரப்பட்டுள்ளது. பீகார் கிரிக்கெட் சங்கம், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்கும் அவகாசம் தரப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.