

கிரிக்கெட் என்ற வார்த்தையைக் கேட்டாலே முகம் சுழிக்கும் குணம் கொண்டோரையும்கூட இந்தியா - பாகிஸ்தான் மோதும் ஆட்டம் என்றால் ஒரு நிமிடம் ஆர்வத்தைத் தூண்டிச் செல்லும் என்பது நாடறிந்த உண்மை. உலகில் எத்தனைப் போட்டிகள் நடைபெற்றாலும் கிரிக்கெட்டில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகிறது என்றால் விளையாட்டு ரசிகர்களுக்கும் விமர்சகர்களுக்கும் நல்ல தீனி கிடைப்பது உண்டு.
சாதாரண ஆட்டங்களிலேயே விறுவிறுப்பு தொற்றிக்கொள்ளும் நிலையில் உலகக் கோப்பைத் தொடரில் இரு அணிகளும் மோதிக்கொள்ளும்ஆட்டம் என்றால் பரபரப்புக்கு கேட்கவா வேண்டும்? ஆம், உலகக் கோப்பைத் தொடரில் தங்கள் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்தியாவும், கடந்த உலகக் கோப்பையில் அரையிறுதியில் தோல்வியைச் சந்தித்த பாகிஸ்தானும் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன என்றால் சும்மாவா?
கிரிக்கெட் கடவுள் என வர்ணிக்கப்பட்டு கடந்த 24 ஆண்டுகளாக இந்திய அணியின் அசைக்க முடியாத நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் இல்லாத குறையுடன் களமிறங்குகிறது இந்திய அணி. சச்சின் இல்லாத குறையைத் தீர்க்கத் தயாராக இருக்கிறோம் என்ற குரலை உயர்த்தி எழுப்பும் வகையில் நமது அணியில் பேட்டிங் வரிசை உலக அளவில் மெச்சும்படியாகத்தான் உள்ளது.
கேப்டன் தோனி, விராட் கோலி, ஷிகர் தவண், அஜிங்க்யா ரஹானே, சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா, அம்பாதி ராயுடு, ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோரைக் கொண்ட நமது அணி பேட்டிங்கில் சிறந்த அணியாகவே உள்ளது.
பந்துவீச்சில் முகமது ஷமி, புவனேஷ்குமார், அஸ்வின் ஆகியோரை மட்டுமே நம்பி இருக்க வேண்டியுள்ளது. உமேஷ் யாதவும், ஸ்டூவர்ட் பின்னியும் கைகொடுத்தால் உண்டு.
ஆனால், இதற்கு எதிர்மறையாக போட்டி அணியான பாகிஸ்தானில் அச்சுறுத்தும் பந்து வீச்சாளர்களுக்கு குறைவில்லாத நிலையே நீடிக்கிறது. இடது கை வேகப் பந்துவீச்சாளர்களான ஜுனைத் கான், முகமது இர்பான், வகாப் ரியாஸ் ஆகியோர் ஆஸ்திரேலிய மைதானங்களில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்துவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. இருப்பினும், அந்த அணி பேட்டிங்கில் முகமது ஹபீஸ், யூனிஸ் கான், மிஸ்பா உல் ஹக், அப்ரிதி ஆகியோரை மட்டுமே நம்பியுள்ளது. இவர்கள் கைகொடுப்பார்களா என்பதை உறுதியிட்டு கூற முடியாத நிலையே நீடிப்பது நமது அணிக்கு பலம் என்றே கூறலாம்.
எத்தனை குறை, நிறைகள் இருந்தாலும் உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை நமது அணி பரம எதிரியான பாகிஸ்தான் அணியிடம் தோல்வியை சந்திக்கவில்லை என்பதே ஒரு சரித்திரம்தான். ஆம் உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இடையே 5 ஆட்டங்கள் நடைபெற்று உள்ளன. இதில், அனைத்திலுமே நமது அணிதான் வெற்றியும் பெற்றுள்ளது.
உலகக் கோப்பை 1975ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டபோதிலும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் 1992ஆம் ஆண்டுதான் முதல் முறையாக களத்தில் மோதின. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மார்ச் 4ஆம் தேதி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அசாருதீன் தலைமையிலான இந்திய அணி 43 ரன்னில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. இருப்பினும், அந்த ஆண்டு இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் முதல்முறையாக பட்டத்தை வென்றது.
தொடர்ந்து, 1996ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி பெங்களூரில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் 39 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை இந்திய அணி வீழ்த்தியது. இருப்பினும், அரை இறுதியில் இலங்கையிடம் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அந்தத் தொடரில் இருந்து வெளியேறியது நமது அணி.
இங்கிலாந்து நாட்டில் உள்ள மான்செஸ்டர் நகரில் 1999ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின் சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தின. இருப்பினும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தானிடம் தொடர் வெற்றியை ருசித்து வந்த இந்திய அணி நான்காவது முறையாக 2003 மார்ச் 1 ஆம் தேதி தென் ஆப்ரிக்காவில் உள்ள செஞ்சுரியன் நகரில் மோதின. கடந்த மூன்று ஆட்டங்களிலும் முதலில் பேட் செய்து வெற்றி பெற்ற இந்திய அணி இந்த முறை இரண்டாவது பேட்டிங் செய்தது.
அந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 273 ரன்கள் குவித்த நிலையில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றிக் கனியை பறித்தது இந்திய அணி. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய சச்சின் டெண்டுல்கர் 98 ரன்களை
குவித்தார்.
5-ஆவது முறையாக 2011 மார்ச் 30ஆம் தேதி மொஹாலியில் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. யார் கோப்பையை வென்றாலும் பரவாயில்லை இதுதான் உண்மையான இறுதி ஆட்டம் என கிரிக்கெட் வர்ணனையாளர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.
அதற்கு ஏற்றால்போல் கடைசி ஓவர் வரை பரபரப்புடன் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றது. இறுதி ஆட்டத்தில் இலங்கை அணியை வீழ்த்தி தற்போது வரை உலகக் கோப்பை சாம்பியனாக திகழ்கிறது இந்திய அணி.
வழக்கமாக தொடரின் ஏதாவது ஒரு கட்டத்தில் இரு அணிகளும் மோதக் கூடிய சூழல் இருக்கும். ஆனால், இந்த உலகக் கோப்பைத் தொடரில் தங்கள் முதல் ஆட்டத்திலேயே மோதுவதால் பரபரப்பு உச்சகட்டத்தை அடைந்துள்ளது.
உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுடனான ஆட்டம் என்றாலே தோல்விதானா என்ற வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்பில் இருக்கும் பாகிஸ்தானும், சரித்திர வெற்றியைத் தொடர வேண்டும் என்ற முனைப்போடு களமிறங்கும் இந்திய அணியும் மோதும் ஆட்டத்தை உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.