

ஐபிஎல் 6ஆவது கிரிக்கெட் போட்டித் தொடரின்போது, ஸ்பாட் ஃபிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், இந்திய அணி முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த், கிரிக்கெட் வீரர்கள் அஜித் சாண்டிலா, அங்கித் சவாண் உள்ளிட்ட 36 பேரையும் குற்றச்சாட்டுகளில் இருந்து தில்லி பாட்டியாலா நீதிமன்றம் சனிக்கிழமை விடுவித்தது. இதனைத் தொடர்ந்து கிரிக்கெட் பயிற்சியை ஆரம்பித்துள்ளார் ஸ்ரீசாந்த்.
2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது ஸ்பாட் ஃபிக்சிங் எனப்படும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்களான ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா, அங்கித் சவாண் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, அவர்களுக்கு கிரிக்கெட் விளையாடுவதற்கு உடனடியாக பிசிசிஐ ஆயுள்காலத் தடை விதித்தது.
ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா, அங்கித் சவாண் உள்ளிட்ட 36 பேர் மீது பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தேவையான ஆதாரங்களை தில்லி போலீஸாரால் தாக்கல் செய்ய இயலவில்லை. ஆதலால், மோசடி, சதி ஆகிய குற்றச்சாட்டுகள், மகாராஷ்டிர ஒருங்கிணைக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் சட்டத்தின் (எம்சிஒசிஏ) கீழ் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆகிய அனைத்திலும் இருந்து 36 பேரும் விடுவிக்கப்பட்டார்கள்.
இதைத் தொடர்ந்து ஸ்ரீசாந்த், தனது கிரிக்கெட் பயிற்சியை ஆரம்பித்துள்ளார். கொச்சியிலுள்ள எடபள்ளி மைதானத்தில் அவர் பயிற்சி எடுக்க வந்தபோது பலரும் அவரைப் பார்க்க மைதானத்துக்கு வந்து உற்சாகம் அளித்தார்கள்.
தன் மகளால்தான் தனக்கு அதிர்ஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கூறும் ஸ்ரீசாந்த் மேலும் கூறியதாவது:
நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்த அன்று என் மகளை அழைத்துச் செல்லவில்லை. என்னுடன் மனைவி மட்டும்தான் வந்தார். குற்றவாளியின் மகள் என்று என் மகளைப் பார்த்து யாரும் சொல்லிவிடக்கூடாது என நினைத்தேன்.
ஆகஸ்ட் 19 அன்று மகளுக்குப் பெயர் சூட்ட உள்ளேன். ஸ்ரீகுட்டி என்று இப்போதைக்கு அழைத்து வருகிறோம். மலையாளம் மற்றும் ராஜஸ்தானி மொழிகளில் நல்ல அர்த்தம் வருகிற மாதிரியான ஒரு பெயரைத் தேடிக்கொண்டு இருக்கிறோம். 3 வயதுக்குப் பிறகு என் மகள் என் பெயரை கூகுளில் தேடும்போது என்னை ஒரு கிரிக்கெட் வீரராக மட்டுமே அவள் அறியவேண்டும், தீவிரவாதியாக அல்ல. என்றார்.
தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, 3 பேருக்கும் விதிக்கப்பட்ட ஆயுள்காலத் தடையை பிசிசிஐ நீக்கலாம் என எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், 3 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள்கால தடை விலக்கிக் கொள்ளப்பட மாட்டாது என பிசிசிஐ தெரிவித்துவிட்டது. இந்நிலையில் கேரளாவுக்காக ரஞ்சி போட்டியில் விளையாட ஸ்ரீசாந்த் ஆர்வம் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.