நினைவலைகள்: விஸ்வநாதன் ஆனந்தை செஸ் பக்கம் திருப்பியவர்!

அண்ணா, அக்கா எல்லாம் செஸ் விளையாடறாங்க பார், நீயும் வந்து விளையாடு என்று உற்சாகம் கொடுத்தார்.
நினைவலைகள்: விஸ்வநாதன் ஆனந்தை செஸ் பக்கம் திருப்பியவர்!
Updated on
2 min read

பிரபல செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்தின் தாயார் சுசீலா (வயது 79) சமீபத்தில் சென்னையில் காலமானார். ஆனந்த் செஸ் வீரராக ஆவதற்கு முக்கிய காரணமே அவருடைய தாய் தான். அவருடைய நினைவலைகள்:

விஸ்வநாதன் - சுசீலா தம்பதியருக்கு மூன்றாவது குழந்தையாக 11 வருட இடைவெளியில் பிறந்தார் ஆனந்த். 1969, டிசம்பர் 11. ஆனந்தை செல்லமாக பாபா என்று அழைப்பார் அவருடைய அம்மா. 

சிறுவயதில் ஆனந்த் முதலில் டென்னிஸ் கற்றுக்கொள்ள அனுப்பப்பட்டார். ஆனால், அதிகாலையிலேயே எழவேண்டும் என்பதால் டென்னிஸ் மீது அவருக்கு விருப்பம் ஏற்படவில்லை. இதனால் அவருடைய அம்மா சுசீலா தான் ஆனந்த்தை செஸ் பக்கம் திருப்பினார். அண்ணா, அக்கா எல்லாம் செஸ் விளையாடறாங்க பார், நீயும் வந்து விளையாடு என்று உற்சாகம் கொடுத்தார்.

இதுதான் யானை, இது ராணி, இதுங்க எல்லாம் சேனை, இது குதிரை... ஒவ்வொன்றையும் எப்படி நகர்த்தவேண்டும் என்று சொல்லிக்கொடுத்தார் அம்மா. அவர் சொல்லிகொடுத்த விதத்தில் ஆனந்துக்கு செஸ் மிகவும் பிடித்துவிட்டது. 

ஆனந்துக்கு அப்போது ஒன்பது வயது. ரயில்வேயில் வேலை பார்த்துவந்த தந்தை விஸ்வநாதனுக்கு பிலிப்பைன்ஸ் நாட்டின்  தலைநகரான மணிலாவுக்கு மாற்றம் கிடைத்தது. இரண்டு வருடங்கள் மணிலா ரயில் அமைப்பின் ஆலோசகராக விஸ்வநாதன் நியமிக்கப்பட்டார். குடும்பத்தோடு மணிலாவுக்குச் சென்றனர்.  

மணிலாவில் வந்து இறங்கியவுடன் ஆனந்துக்குக் கிடைத்த முதல் இன்பதிர்ச்சி - கிரிக்கெட்போல அங்கு செஸ் ஆட்டங்கள் டி.வி.யில் ஒளிபரப்பானதுதான். அட, இந்த ஊரில் செஸ் இவ்வளவு ஃபேமஸா என்று வியந்தார்.

செஸ், ஐந்தாம் நூற்றாண்டில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு அது 14ஆம் நூற்றாண்டில்தான் அறிமுகமானது. ஆனால் ஆசிய செஸ்ஸின் மெக்கா என்று பெயரை முதலில் தட்டிச் சென்றது பிலிப்பைன்ஸ்தான்.  அன்று மணிலாவின் மண்ணுக்குப் பெருமை சேர்த்தவர்  இக்யூன் டோரே. அப்போது ஆசியக் கண்டம் முழுவதுக்கும் சேர்த்து இவர் ஒருவர்தான் கிராண்ட் மாஸ்டராக இருந்தார். 1974ல் நடந்த செஸ் ஒலிம்பியாடில் இவர் வெள்ளிப் பதக்கம் பெற்றார். அவ்வளவுதான். மணிலாவில் செஸ் ஜூரம் பற்றிக்கொண்டது. 

மணிலா தொலைக்காட்சியில் ’செஸ் டுடே’ என்கிற செஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.  ஆனால் அந்த நிகழ்ச்சியை ஆனந்தால் பார்க்கமுடியாது. மதியம் ஒரு மணி அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அந்தச் சமயம் அவர் பள்ளிக்கூடத்தில் இருக்க நேரிடும். 

டிவி நிகழ்ச்சியைக் கட்டாயம் பார்க்கவேண்டும் என்று ஆனந்த் அம்மாவிடம் கட்டளையாகவே சொல்லிவிட்டார். சுசீலா தினமும் அந்த டிவி நிகழ்ச்சியைப் பார்ப்பார். அதில் ஒளிபரப்பாகும் செஸ் ஆட்டங்களைக் குறித்து வைத்துக்கொள்வார். ஆனந்த் பள்ளியை விட்டு வந்த பிறகு அந்த நிகழ்ச்சியைப் பற்றித்தான் அம்மாவும் மகனும் பேசிக்கொள்வார்கள்.  ‘அம்மா, நீ ஏன் டேப் செய்துவைக்கக்கூடாது’ என்றார் ஒருநாள். அடுத்த நாள்முதல் நிகழ்ச்சியை வி.சி.ஆர்.ரில் பதிவு செய்துவைத்தார் சுசீலா.

மணிலாவில் நிறைய செஸ் போட்டிகளும் நடந்தன.  ‘அம்மா, நானும் கலந்துக்கறேன்’ என்றார். உடனே மறுவேலையாக மணிலாவில் எங்கெல்லாம் செஸ் போட்டி நடக்கிறதோ அங்கெல்லாம் ஆனந்தை கலந்துகொள்ள வைத்தார் சுசீலா. கலந்துகொண்ட போட்டிகளில் வெற்றி பெற்று அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்தார் ஆனந்த்.

*

இளம்வயதில் ஆனந்த் வெளியூர் செல்லும்போதெல்லாம் அவர் அம்மா பெட்டியில் இருபது டி-ஷர்டுகளை அடுக்கி வைப்பார். முக்கால்வாசி சிவப்பும் மஞ்சளும்  கொண்ட டி-ஷர்டுகளாகவே இருக்கும். ஆனந்துக்கு அந்த வண்ணங்கள்தான் மிகவும் பிடிக்கும் என்பதுதான் காரணம்.

*

ஆனந்த், முதல்முதலாக கோயம்புத்தூரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்று கிராண்ட் மாஸ்டர் ஆனார். இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் ஆனந்த் தான். பதினெட்டாவது வயதில் இந்தச் சாதனையைச் செய்துமுடித்தார். போட்டியைக் காணவந்த சிறுவர்கள் பலரும் ஆனந்துக்குப் பரிசளித்தார்கள். அதை கடைசி வரை சேமித்து வைத்திருந்தார் சுசீலா.

*

லண்டனில் நடந்த ஒரு போட்டியின்போது,  ஆட்டம் முடிந்ததும் பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த தன் அம்மாவைப் பார்த்து கட்டை விரலைக் காண்பித்தார் ஆனந்த். சந்தோச மிகுதியில் சுசீலாவும் அதைத் திருப்பிச் செய்தார். அருகிலிருந்தவர்கள் என்ன ஏது என்று விசாரிக்க, ‘அவன் என் மகன், வி ஆர் ஃப்ரம் இண்டியா’ என்று பெருமை பொங்கக் கூறினார் சுசீலா.

*

ஒரு பேட்டியில் தன் தாயைப் பற்றி இவ்வாறு கூறினார் ஆனந்த்:

அம்மா சுசீலா என் குரு. அவர்தான் செஸ் எப்படி ஆடுவது என எனக்குக் கற்றுக்கொடுத்தார். 17 வயது வரை எல்லா தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளுக்கு அவர் தான் என்னை அழைத்துச் சென்றுள்ளார். எனக்குத் துணையாக இருப்பதற்காக அம்மா நீச்சல் கற்றுக்கொண்டார். நானும் அம்மாவும் பல மணி நேரம் சீட்டாட்டம் ஆடுவோம். மிகவும் ருசியான தென்னிந்திய உணவுகளை எனக்குச் சமைத்துத் தருவார். அவர், எனக்கு ஒரு நல்ல நண்பர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com