

நாகபுரியில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஹார்மர், மார்கலின் அபாரமான பந்துவீச்சால் இந்திய அணி 215 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.
இந்திய - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முன்னதாக, மொஹாலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 109 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்திய அணி. பெங்களூருவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் அந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் நடைபெறும் 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஸ்பின் பிட்ச் என்பதால் மூன்று ஸ்பின்னர்களைத் தேர்வு செய்துள்ளது. அஸ்வின், மிஸ்ரா, ஜடேஜா. ஆரோனுக்குப் பதிலாக ரோஹித் சர்மாவும் பின்னிக்குப் பதிலாக மிஸ்ராவும் அணியில் இடம்பிடித்துள்ளார்கள்.
ஆரம்பத்திலிருந்தே ஆடுகளம் ஸ்பின் பந்துவீச்சுக்குச் சாதகமாக இருந்தது. இதனால் இந்திய வீரர்கள் மிகவும் கவனமாக ஆடவேண்டியிருந்தது. 9-வது ஓவர் முதல், ஸ்பின்னர்கள் பந்துவீச ஆரம்பித்தார்கள். 14-வது ஓவரில் தவான், எல்கரின் பந்துவீச்சில் 12 ரன்களில் அவுட் ஆனார். நம்பிக்கையுடன் ஆடிவந்த முரளி விஜய், 40 ரன்களில் மார்கலின் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். உணவு இடைவேளையின்போது இந்திய அணி 27 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்தது.
அதன்பிறகு ஆட்டம் தொடர்ந்தபோது ஹார்மரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் புஜாரா. அவர் 21 ரன்கள் எடுத்தார். ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆடுகளத்தில் திடீரென ஆதிக்கம் செலுத்தினார் வேகபந்து வீச்சாளரான மார்கல். தொடர்ந்து துல்லியமாக பந்துவீசியதால் அவருக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன.
இதுவரை இந்திய மண்ணில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தாத ரஹானே இந்தமுறையும் 13 ரன்களில் மார்கலின் பந்துவீச்சில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். மார்கல் தனது அடுத்த ஓவரில் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தினார். அவர் 22 ரன்கள் எடுத்தார்.
பேட்டிங்கைப் பலப்படுத்த அணியில் சேர்க்கப்பட்ட ரோஹித் சர்மா 28 பந்துகளைச் சந்தித்து 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஹார்மரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
தேநீர் இடைவேளையின்போது, 55 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 21, சஹா 9 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
ஜடேஜாவும் சஹாவும் தாக்குப்பிடித்து ஆடி அணியின் ஸ்கோரை மெல்ல நகர்த்தினார்கள். 7-வது விக்கெட்டுக்கு 17 ஓவர்களுக்கும் அதிகமாக ஆடி 48 ரன்கள் சேர்த்த நிலையில் ஜடேஜா அவுட் ஆனார். அவர் 34 ரன்கள் எடுத்தார். அதன்பிறகு மீதமுள்ள விக்கெட்டுகளை வீழ்த்த தென் ஆப்பிரிக்க அணிக்கு அதிக நேரம் ஆகவில்லை. சஹா 32, அஸ்வின் 15, மிஸ்ரா 3 ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.
இதனால் இந்திய அணி 78.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஹார்மர் 4, மார்கல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
தெ.ஆ. 11/2
இதன்பிறகு ஆடவந்த தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் வழக்கம்போல இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சில் திணறினார்கள். முதல் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். வான் ஸைல் ரன் எடுவும் எடுக்காமல் வெளியேறினார். நைட் வாட்ச்மேனான இம்ரான் தாஹிர் 4 ரன்களில் ஜடேஜா பந்தில் க்ளீன் போல்ட் ஆனார். முதல்நாள் ஆட்டநேர முடிவில் தெ.ஆ அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 ஓவர்களில் 11 ரன்கள் எடுத்தது. எல்கர் (6 ரன்கள்), ஆம்லா (0) களத்தில் உள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.