
சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் உடல்நலக் குறைவு காரணமாக யூஜெனி பௌசார்ட், ஜோ வில்ஃப்ரைடு சோங்கா ஆகியோர் பாதியிலேயே விலகினர்.
சீன ஓபன் டென்னிஸ் போட்டி பெய்ஜிங்கில் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் கனடாவின் யூஜெனி பௌசார்ட், செர்பியாவின் ஆன்ட்ரியா பெட்கோவிச்சை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தின் இரண்டாவது செட்டில், மயக்கம் வருவதாக கூறி பௌசார்ட் பாதியிலேயே விலகினார். யு.எஸ்.ஓபன் போட்டியின் போது ஓய்வறையில் தவறிவிழுந்து காயமடைந்த பௌசார்ட் அந்த போட்டியில் பாதியில் விலகினார்.
அதன் பிறகு அவர், பங்கேற்ற போட்டி இதுவாகும். ஆனால், இந்த முறையும் அவரது உடல் நிலை ஒத்துழைக்கவில்லை. இதனால், பெட்கோவிச் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
இதர போட்டிகளில் சுவிட்சர்லாந்தின் பெலின்டா பென்சிக், அமெரிக்காவின் மாடிசன் பெரங்கிலியையும், குரோஷியாவின் மிர்ஜானா லூசிக், ருமேனியாவின் இரினா, கேமிலா பேகுவையும் வீழ்த்தினர். ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோஸுர், ருமேனியாவின் மோனிகா நிக்ளூஸ்கூவை வெற்றி கண்டு 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
சோங்கா விலகல்: இதேபோல, ஆடவர் ஒற்றையர் பிரிவிலும் ஜோ வில்ஃப்ரைடு சோங்கா, உடல் நலக்குறைவால் விலகினார். முதல் சுற்றில், ஆஸ்திரியாவின் ஆன்ட்ரியாஸ் ஹெய்டரை எதிர்கொண்டார்.
இந்தப் போட்டியில் 7-6 (7/4), 6-2 என்ற செட் கணக்கில் ஆன்ட்ரியாஸ் ஹெய்டர் முன்னிலையில் இருந்தபோது சோங்கா, ஆட்டத்திலிருந்து விலகினார். பெய்ஜிங்கில் நிலவிய காற்று மாசுபாடு அவருக்கு உடல் நலக் குறைவை ஏற்படுத்தியது. மயக்கம் வருவதாக தெரிவித்த சோங்காவை மருத்துவர்கள் உடனடியாக பரிசோதித்தனர்.
மற்ற ஆட்டங்களில், பெல்ஜியத்தின் டேவிட் காஃபின், இத்தாலியின் பேபியோ ஃபாக்னினி, சீனாவின் ஹாங் ஜீ, செக் குடியரசின் லூகாஸ் ரசோல் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
ஷென்ஜென் ஓபன்: ஷென்ஜென் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் செக் குடியரசின் தாமஸ் பெர்டிச்சும், ஸ்பெயினின் கார்சியா லோபஸும் மோதினர். இந்த ஆட்டத்தில் 6-3, 7-6 (9/7) என்ற செட் கணக்குகளில் தாமஸ் பெர்டிச் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
இதேபோல ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், கீ நிஷிகோரி, அட்சுமா இடோ, சாம் கியூரே ஆகியோர் வெற்றி பெற்று 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.