

கேரளாவுடனான சச்சினின் பிணைப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.
கேரளாவில் நடந்த 2015 தேசிய விளையாட்டுப் போட்டியின் தூதராக இருந்தார் சச்சின். இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் கேரள அணிக்கு சச்சின் இணை உரிமையாளர். கேரளாவில் நீரூற்றுடன் கூடிய அழகிய ஆடம்பர வீடு ஒன்றை சச்சின் வாங்க முடிவு செய்துள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன.
இப்போது கேரளாவுடனான புதிய பிணைப்பாக வயநாட்டில் கட்டப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானத்துக்கு சச்சினின் பெயரைச் சூட்ட கேரள கிரிக்கெட் சங்கம் (கேசிஏ) முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதுபற்றி கேசிஏ தலைவர் டி.சி. மேத்யூ கூறியதாவது:
ஏற்கெனவே கொச்சியிலுள்ள நேரு மைதானத்தின் பெவிலியன் பகுதிக்கு சச்சினின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்போது வயநாட்டில் கட்டப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானம் அல்லது கட்டப்பட்டு வரும் புதிய மைதானம் என ஏதாவது ஒன்றுக்கு சச்சினின் பெயரைச் சூட்ட முடிவு செய்துள்ளோம். இதுகுறித்து சச்சினிடமும் ஆலோசனை செய்வோம். கேரளாவின் 14 மாவட்டங்களிலும் நவீன கிரிக்கெட் மைதானங்களை அமைக்க அடுத்த 2 வருடங்களுக்கு சச்சினுடன் இணைந்து பணியாற்ற உள்ளோம். இந்தத் திட்டங்களில் அவரும் தன்னை இணைத்துக்கொள்ளவேண்டும் என விரும்புகிறோம் என்றார்.
இந்திய அணி கேப்டன் தோனி சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டனாக உள்ளார். மேலும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னை அணியின் இணை உரிமையாளராகவும் உள்ளார். சென்னைக்கு தோனி என்பதுபோல கேரளாவுக்கு சச்சின் என்கிற நிலைமை உருவாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.