வங்கதேச ஏ அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியா ஏ அணி தோல்வி அடைந்துள்ளது.
இந்திய - வங்கதேச ஏ அணிகளிடையிலான 3 போட்டிகள் கொண்ட அதிகாரபூர்வமற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த புதன்கிழமை பெங்களூரில் நடந்த முதல் போட்டியில் 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய ஏ அணி அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்நிலையில், 2-ஆவது ஒருநாள் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய ஏ அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. வங்கதேச அணியின் முதல் 5 விக்கெட்டுகள் 82 ரன்களுக்குள் வீழ்ந்தாலும் அதன்பிறகு வங்கதேச வீரர்கள் பொறுப்பாக ஆடினார்கள். நாசிர் ஹோசைன் சிறப்பாக ஆடி கடைசிவரை ஆட்டமிழக்காமல் 102 ரன்கள் எடுத்தார். லிடன் 45 ரன்கள் எடுத்தார். வங்கதேச ஏ அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்தது. இந்திய பவுலர்களில் ரிஷி தவான் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
பிறகு ஆடிய இந்திய ஏ அணி ஆரம்பத்தில் சிறப்பாக ஆடினாலும் பிறகு விக்கெட்டுகளை தொடர்ந்து இழந்தது. 2 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் என்கிற வலிமையான நிலைமையில் இருந்தது. பிறகு எதிர்பாராதவிதமாக 42.2 ஓவர்களில் 187 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் வங்கதேச ஏ அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்திய ஏ அணியில் உன்முக்த் சந்த் 56, மனிஷ் பாண்டே 36 ஆகியோர் அதிகமாக ரன்கள் எடுத்தார்கள். நாசிர் ஹொசைன் 5, ருபெல் ஹொசைன் 4 விக்கெட்டுகளை எடுத்து வங்கதேச ஏ அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்கள்.
3-வது போட்டி, ஞாயிறு அன்று நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.