17-ஆவது ஒலிம்பிக் போட்டி இத்தாலி தலைநகர் ரோமில் 1960-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெற்றது. முன்னதாக 1908-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பை இத்தாலி பெற்றது. ஆனால் 1906-இல் ஏற்பட்ட வேஸுவியஸ் எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து போட்டி லண்டனுக்கு மாற்றப்பட்டது. அதன்பிறகு ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பைப் பெற இத்தாலி 52 ஆண்டுகள் காத்திருக்க நேரிட்டது.
ரோம் ஒலிம்பிக்கில் 83 நாடுகளைச் சேர்ந்த 4,727 வீரர்கள், 611 வீராங்கனைகள் என மொத்தம் 5,338 பேர் கலந்து கொண்டனர். 17 விளையாட்டுகளில் 150 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. மகளிர் பிரிவில் நடைபெற்ற 16 வகையான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளில் 15 பதக்கங்களை சோவியத் யூனியன் தட்டிச் சென்றது. வாள் சண்டையில் சாப்ரே பிரிவில் தொடர்ந்து 6-ஆவது முறையாக தங்கப் பதக்கம் வென்றார் ஹங்கேரியின் அலடார் ஜெரிவிச்.
கூடைப்பந்து போட்டியில் அமெரிக்க அணி தொடர்ந்து 5-ஆவது முறையாக தங்கம் வென்றது.
சோவியத் யூனியன் 43 தங்கம், 29 வெள்ளி, 31 வெண்கலம் என மொத்தம் 103 பதக்கங்களை கைப்பற்றி பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. அமெரிக்கா 34 தங்கம், 21 வெள்ளி, 16 வெண்கலம் என 71 பதக்கங்களுடன் 2-ஆவது இடத்தைப் பிடித்தது. இத்தாலி 13 தங்கம், 10 வெள்ளி, 13 வெண்கலம் என 36 பதக்கங்களுடன் 3-ஆவது இடத்தைப் பிடித்தது.
போலியோவை வென்றவர்
போலியோவால் பாதிக்கப்பட்டவரான அமெரிக்காவின் வில்மா ருடால்ஃப், 100 மீ. ஓட்டம், 200 மீ. ஓட்டம், 4*100 மீ. தொடர் ஓட்டம் ஆகியவற்றில் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி வெற்றிக்கு ஊனம் தடையல்ல என்பதை நிரூபித்தார். உலகின் அதிவேக பெண்மணி என அழைக்கப்பட்ட வில்மா, ஒலிம்பிக் தடகளத்தில் மூன்று தங்கம் வென்ற முதல் அமெரிக்க பெண் ஆவார்.
கறுப்பினத்தவரான வில்மா, வறுமையான குடும்பத்தில் 20-ஆவது குழந்தையாக பிறந்தவர். அவருடைய தந்தை எட், ரயில்வேயில் சுமை தூக்கும் தொழிலாளி. தாயார் பிளான்சி வீட்டு வேலை செய்தவர். குறைபிரசவத்தில் பிறந்த வில்மா, தனது 4-ஆவது வயதில் போலியோ தாக்குதலுக்கு உள்ளானார். கடும் போராட்டத்துக்குப் பிறகு அதிலிருந்து மீண்டாலும், பிரேஸ் என்றழைக்கப்படும் பெல்ட் போன்ற கருவியை இடது காலில் அணிந்தால் மட்டுமே அவரால் நடக்க முடிந்தது.
9 வயதுக்குப் பிறகு இயல்பாக நடக்க ஆரம்பித்தாலும், அம்மை, இருமல், காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டார். 12-ஆவது வயதில் அடியெடுத்து வைத்தபோது அனைத்து நோய்களிலிருந்தும் விடுபட்டார் வில்மா.
பின்னர் விளையாட்டில் கால் பதித்த வில்மா, தனது 16-ஆவது வயதில் அமெரிக்க ஒலிம்பிக் அணியில் இடம்பிடித்தார். 1956-இல் நடைபெற்ற மெல்போர்ன் ஒலிம்பிக்கில் தொடர் ஓட்டத்தில் வெண்கலம் வென்ற வில்மா, ரோம் ஒலிம்பிக்கில் 3 தங்கப் பதக்கங்களை கைப்பற்றி உலகை வியக்கவைத்தார். பின்னர் புற்று நோயால் பாதிக்கப்பட்ட வில்மா, 54-ஆவது வயதில் மரணமடைந்தார்.
ஒலிம்பிக்கில் உயிரை விட்டவர்
டென்மார்க்கின் சைக்கிள் பந்தய வீரரான நட் நிமார்க் ஜென்ஸன், போட்டியின்போது சுருண்டு விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார். ஒலிம்பிக் போட்டியின்போது உயிரிழந்த 2-வது வீரர் ஜென்சன் ஆவார். முன்னதாக 1912-ல் போர்ச்சுகல் மாரத்தான் வீரர் பிரான்சிஸ்கோ லசாரோ போட்டியின்போது உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
காலணியின்றி கலக்கியவர்
எத்தியோப்பியாவின் அபேபே பிக்கிலா, மாரத்தான் போட்டியில் வெறும் கால்களுடன் ஓடி தங்கப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் கறுப்பு ஆப்பிரிக்கர் இவர்தான். எத்தியோப்பியா அணியில் இடம்பெற்றிருந்த வாமி பைராட் என்ற வீரருக்கு
கணுக்காலில் காயம் ஏற்பட்டதன் காரணமாக கடைசி நேரத்தில் மாரத்தான் அணியில் சேர்க்கப்பட்டார்
பிக்கிலா. ஆனால் அவருக்கு வழங்கப்பட்ட ஷூ அவருடைய காலுக்கு பொருத்தமானதாக இல்லை. இதையடுத்து வெறுங்காலுடன் ஓடுவது என முடிவு செய்தார் பிக்கிலா. அசத்தலாக ஓடிய பிக்கிலா, மாரத்தானில் அப்போது அசைக்க முடியாத வீரராகத் திகழ்ந்த மொராக்கோவின் ரேடி பென் அப்டெஸலாமை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்தார். ரேடி பென், இலக்கை
எட்டுவதற்கு பிக்கிலாவைவிட 25 விநாடிகள் கூடுதலாக எடுத்துக் கொண்டார். பிக்கிலாவின் சாதனையை
அங்கீகரிக்கும் வகையில் எகிப்தில் உள்ள ஒரு மைதானத்துக்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டது.
இந்தியாவின் தங்க வேட்டைக்கு "செக்'
ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டியில் 1928 முதல் தொடர்ந்து 6 முறை தங்கம் வென்ற இந்திய அணி, இந்த முறை இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோற்றது. இதனால் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கமே கிடைத்தது. இந்தியாவின் தங்க வேட்டைக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான், முந்தைய ஒலிம்பிக்கில் இந்தியாவிடம் கண்டிருந்த தோல்விக்கும் பதிலடி கொடுத்தது.
முகமது அலிக்கு தங்கம்குத்துச்சண்டை போட்டியில் லைட் ஹெவிவெயிட்
பிரிவில் (81 கிலோ) அமெரிக்காவின் முகமது அலி தங்கப் பதக்கம் வென்றார். ஆனால் அந்தப் போட்டியின்போது முகமது அலியின் பெயர் கேஸியஸ் கிளே என்பதாகும். பின்னாளில் அவர் தனது பெயரை முகமது அலி என
மாற்றிக் கொண்டார். உலகின் தலைசிறந்த தொழில்முறை குத்துச்சண்டை வீரராக திகழ்ந்த முகமது அலி, கடந்த ஜூன் 3-ஆம் தேதி மரணமடைந்தார்.
துடுப்பு படகில் துடிப்பாக திகழ்ந்தவர்
அதிவேக ஒற்றை துடுப்பு படகுப் போட்டியில் ஸ்வீடனின் கெர்ட் பிரெட்ரிக்ஸன் 6-ஆவது முறையாக தங்கம் வென்றார். 1948 முதல் 1960 வரையிலான காலங்களில் ஒலிம்பிக்கில் 6 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 8 பதக்கங்களைக் குவித்தார் கெர்ட்.
உலகின் தலைசிறந்த படகுப் போட்டி வீரரான கெர்ட், உலக சாம்பியன்ஷிப்பில் 7 தங்கப் பதக்கங்களையும், ஸ்வீடன் சாம்பியன்ஷிப்பில் 71 பதக்கங்களையும் வென்று குவித்தவர். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரருக்கு வழங்கப்படும் முகமது தாஹேர் விருது 1956-ஆம் ஆண்டு கெர்ட்டுக்கு வழங்கப்பட்டது. அந்த விருதைப் பெற்ற ஒரே படகுப் போட்டி வீரர் கெர்ட்தான். 1964-இல் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற ஸ்வீடன் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக கெர்ட் இருந்தார். 2006-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி மரணமடைந்தார் கெர்ட். அப்போது அவருக்கு வயது 86.
அசத்திய அர்மின்
ஜெர்மனியின் அர்மின் ஹாரி (படத்தில் இடது கோடி), 100மீ.
ஓட்டத்தில் 10.2 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து புதிய ஒலிம்பிக் சாதனையைப் படைத்தார். இதுதவிர 100 மீ. ஓட்டத்தில் வென்ற
அமெரிக்கர் அல்லாத முதல் வீரர் என்ற பெருமையும் அர்மின் வசமானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.