தொடரும் தோனியின் ‘சிக்ஸர்’ சாதனை!

இதுவரை 12 சர்வதேசப் போட்டிகளில் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்துள்ளார் தோனி. அதனால்தான் பல போட்டிகளில், தோனி வின்னிங் சிக்ஸர் அடிப்பாரா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
தொடரும் தோனியின் ‘சிக்ஸர்’ சாதனை!
Updated on
1 min read

2011 உலகக்கோப்பையை சிக்ஸர் அடித்து தோனி முடித்து வைத்ததை யாரால் மறக்கமுடியும்? நேற்றைய ஆசிய கோப்பை இறுதிப் போட்டியிலும் சிக்ஸர் அடித்து கோலாகலமாக ஆட்டத்தை முடித்துவைத்துள்ளார் தோனி.

போட்டியின் கடைசி 2 ஓவர்களில் இந்தியாவின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. அல்-அமீன் வீசிய 14-ஆவது ஓவரின் முதல் பந்தில் இமாலய சிக்ஸர், 4-வது பந்தில் பவுண்டரியை விளாசிய தோனி, அடுத்தப் பந்தில் மற்றொரு சிக்ஸரை விளாச, இந்தியா 13.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்து ஆசிய கோப்பையை வென்றது. தோனி 6 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கடந்த சில மாதங்களாக தோனியின் அதிரடி ஆட்டத்தில் ஒரு சுணக்கம் ஏற்பட்டது உண்மைதான். ஆனால் நேற்றைய தோனியின் ஆட்டம் அத்தனை ஏமாற்றங்களுக்குமான ஒரு மாற்றாக அமைந்தது.

நேற்றோடு, இதுவரை 12 சர்வதேசப் போட்டிகளில் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்துள்ளார் தோனி. 9 முறை ஒருநாள் போட்டிகளிலும் 3 டி20 போட்டிகளிலும் இந்தச் சாதனையைச் செய்துள்ளார். 2004ம் வருடம் டிசம்பர் மாதம் ஒருநாள் சர்வதேசப் போட்டியில் ஆட ஆரம்பித்த தோனி, 2005-ம் வருடம் மட்டும் 5 ஒருநாள் போட்டிகளில் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்துவைத்துள்ளார். அதனால்தான் பல போட்டிகளில், தோனி வின்னிங் சிக்ஸர் அடிப்பாரா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இலங்கை அணியுடன் மட்டும் 4 ஒருநாள் போட்டிகளில் இதுபோல சாதனை செய்துள்ளார்.

சர்வதேசப் போட்டிகளில் இதுவரை 300 சிக்ஸர்கள் அடித்துள்ளார் தோனி. அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 469 சிக்ஸர்கள் அடித்து அஃப்ரிடி முதல் இடத்தில் உள்ளார். கெய்ல் (423), மெக்கல்லம் (398), ஜெயசூர்யா (352) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் தோனி உள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com