டெஸ்ட் தொடரை வென்றது நியூஸிலாந்து: கடைசி ஆட்டத்தில் இன்னிங்ஸ் வெற்றி
By DIN | Published On : 15th December 2020 07:22 AM | Last Updated : 15th December 2020 07:53 AM | அ+அ அ- |

டெஸ்ட் தொடரை வென்றதற்கான கோப்பையுடன் நியூஸிலாந்து வீரர்கள்.
வெலிங்டன்: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2- ஆவது டெஸ்டில் நியூஸிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வென்றது.
2 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் ஏற்கெனவே முதல் ஆட்டத்தில் வென்ற நியூஸிலாந்து, தற்போது 2- ஆவது ஆட்டத்திலும் வென்று தொடரை முற்றிலுமாகக் கைப்பற்றியுள்ளது. ஹென்றி நிகோல்ஸ் ஆட்டநாயகனாகவும், கைல் ஜேமிசன் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
வெலிங்டனில் நடைபெற்ற 2- ஆவது டெஸ்டில் ஃபாலோ ஆன் பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் 3- ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை முடிவில் 65.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்திருந்தது. தோல்வியைத் தவிர்க்க 85 ரன்கள் தேவை என்ற நிலையில், ஜேசன் ஹோல்டர் 60, ஜோஷுவா டா சில்வா 25 ரன்களுடன் 4- ஆம் நாளான திங்கள்கிழமை ஆட்டத்தை தொடங்கினர்.
இதில் ஹோல்டர் கூடுதலாக 1 ரன் மட்டும் சேர்த்து வெளியேற, அரைசதம் கடந்த ஜோஷுவா 6 பவுண்டரிகளுடன் 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் வந்தவர்களில் அல்ஸாரி ஜோசஃப் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 24 ரன்கள் சேர்க்க, கடைசி விக்கெட்டாக ஷானன் கேப்ரியல் டக் அவுட்டானார். முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் 79.1 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 317 ரன்களே எடுத்தது.
செமர் ஹோல்டர் 3 பவுண்டரிகள் உள்பட 13 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூஸிலாந்து தரப்பில் போல்ட், வாக்னர் தலா 3, ஜேமிசன், செளதி தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.
வெலிங்டனில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸின் முடிவில் 114 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 460 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஹென்றி நிகோல்ஸ் 174 ரன்கள் விளாசியிருந்தார். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஷானன் கேப்ரியல், அல்ஸாரி ஜோசஃப் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸைதொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள் 56.4 ஓவர்களில் 131 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜெர்மெயின் பிளாக்வுட் மட்டும் 69 ரன்கள் அடித்திருந்தார். நியூஸிலாந்து பெளலர்களில் டிம் செளதி, கைல் ஜேமிசன் தலா 5 விக்கெட் சாய்த்தனர்.
முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் பின்தங்கிய மேற்கிந்தியத் தீவுகள், ஃபாலோ- ஆன் பெற்று 2- ஆவது இன்னிங்ஸைதொடங்கியது. அதிலும் அணியின் விக்கெட்டுகள் வரிசையாக சரிய, தோல்வியடைந்தது மேற்கிந்தியத் தீவுகள்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...