புதுவை கிரிக்கெட் சங்கம் பிசிசிஐ- க்கு கடிதம்
By DIN | Published On : 15th December 2020 07:19 AM | Last Updated : 15th December 2020 07:54 AM | அ+அ அ- |

புதுச்சேரி: புதுவையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த விரும்புவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பிசிசிஐ) புதுச்சேரி கிரிக்கெட் சங்கம் கடிதம் அனுப்பியது.
இதுகுறித்து அந்தச் சங்கம் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
லோதா குழு பரிந்துரைப்படி, புதுச்சேரி கிரிக்கெட் சங்கம் பிசிசிஐ நடத்தும் முக்கியமான போட்டித் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. கிரிக்கெட் கட்டமைப்புகளைச் சிறந்த முறையில் உருவாக்கியுள்ளது. மைதானங்கள் சிறந்த முறையில் கட்டப்பட்டுள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டு கிரிக்கெட் போட்டித் தொடர்களை நடத்தி வருகிறோம். எதிர்காலத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கு எங்களுக்கு அனுமதியளிக்க வேண்டும்.
மேலும், ஒட்டுமொத்த "சையது முஷ்டாக் அலி டி20 கோப்பை' தொடரை நடத்தவும் புதுவை கிரிக்கெட் சங்கத்துக்கு மைதான வசதி உள்ளது. இந்தத் தொடருக்கான போட்டிகளுக்காக 6 மைதானங்களை தரத் தயாராக இருக்கிறோம். இரு மண்டல அணிகள் 4 முதல் 5 மாதங்கள் தங்கும் வகையில் 4 நட்சத்திர உணவகங்கள் புதுச்சேரியில் உள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.