டி20 உலகக் கோப்பை: 15 இடங்களுக்காக 86 அணிகள் மோதல்
By DIN | Published On : 15th December 2020 07:20 AM | Last Updated : 15th December 2020 07:55 AM | அ+அ அ- |

துபை: 2022- ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க 86 அணிகள் தகுதிச்சுற்றுகளில் மோதவுள்ளன.
ஐசிசி திங்கள்கிழமை வெளியிட்ட அட்டவணையின்படி, உலகக் கோப்பை போட்டிக்கான 15 இடங்களுக்கு தகுதிபெற அந்த அணிகள் யாவும் 13 மாதங்களில் 225 ஆட்டங்களில் விளையாடுகின்றன. 4 படிநிலைகளாக அணிகளை தேர்வு செய்யும் இந்த நடைமுறை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தொடங்குகிறது.
ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள இந்த உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க தகுதிபெறுவதற்காக முதல் முறையாக ஹங்கேரி, ருமேனியா, செர்பியா அணிகள் போட்டியிடுகின்றன. அதேபோல், ஐசிசி போட்டிகளில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஃபின்லாந்து மோதவுள்ளது. அதேபோல் உலகக் கோப்பை போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டம் ஒன்றை ஜப்பான் முதல் முறையாக நடத்தவுள்ளது.
தகுதிச்சுற்று போட்டிகள் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக், ஐரோப்பா ஆகிய பிராந்தியங்களில் நடைபெறும். இதில் ஆப்பிரிக்கா, கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியங்களில் இருந்து தலா ஒரு அணி தகுதிபெறும். அதேவேளையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா பிராந்தியங்களில் இருந்து தலா 2 அணிகள் தகுதிபெறும். ஆசியாவிலிருந்து குவாலியஃபயர் "ஏ' மற்றும் "பி' பிரிவுகளில் இருந்து தலா 1 அணி தேர்வாகும். இவை மொத்தமாக 8 அணிகள் கணக்காகும்.
இது தவிர, இந்தியாவில் நடைபெறும் 2021 டி20 உலகக் கோப்பை போட்டியில் கடைசி 4 இடங்களை பிடிக்கும் அணிகள், ஐசிசி டி20 தரவரிசை அடிப்படையில் நேரடியாகத் தகுதிபெற்ற நேபாளம், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், ஜிம்பாப்வே ஆகிய 4 அணிகள் சேர்ந்து மேலும் 8 இடங்களுக்கு தகுதிபெறும்.
இந்த இரு 8 அணிகள் பிரிவிலிருந்து தேர்வாகும் தலா 4 அணிகள், போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா, 2021 உலகக் கோப்பை போட்டியின் அடிப்படையில் நேரடியாகத் தகுதிபெறும் 11 அணிகள் என 16 அணிகள் 2022 உலகக் கோப்பை போட்டியில் விளையாடும்.