வலுவான நிலையில் இந்தியா...மோசமான தோல்வியை தவிர்க்குமா நியூசிலாந்து?
By DIN | Published On : 05th December 2021 03:31 PM | Last Updated : 05th December 2021 03:31 PM | அ+அ அ- |

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.
போட்டியின் மூன்றாம் நாளான இன்று, 332 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா ஆட்டத்தை தொடங்கியது. சிறப்பாக ஆடி வந்த அகர்வால் 62 ரன்கள் எடுத்திருந்தபோது, தனது விக்கெட்டை அஜஸ் படேலிடம் பறிகொடுத்தார். கடந்த சில மாதங்களாகவே சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த புஜாரா, 47 ரன்களுக்கு அவுட்டாகி ரசிகர்களை மீண்டும் ஏமாற்றினார்.
இதையடுத்து, கில், கோலி ஜோடி ரன் குவிப்பில் ஈடுபட்டுவருகிறது. உணவு இடைவேளை வரை, இரண்டு விக்கெட் இழப்புக்கு இந்தியா 142 ரன்களை எடுத்தது. நியூசிலாந்து சிறப்பாக பந்து வீசியதன் காரணமாக, கில் 47 ரன்களுக்கும் கோலி 36 ரன்களுக்கும் பெவிலியன் திரும்பினர்.
தொடர்ந்து, களமிறங்கிய ஐயர், சாஹா, ஜெயந்த் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு தங்களின் விக்கெட்டை இழந்தனர். அதிரடியாக விளையாடிய அக்சர் படேல், 26 பந்துகளில் 41 ரன்களை குவித்தார். இறுதியாக, 7 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் எடுத்திருந்தபோது, இந்தியா டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய அஜாஸ், இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டை கைப்பற்றினார்.
இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கை தொடர்ந்த நியூசிலாந்துக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரரான டாம் லாதம், 6 ரன்கள் எடுத்திருந்தபோது, அஸ்வின் பந்துவீச்சில் தனது விக்கெட்டை இழந்தார்.
பின்னர், 20 ரன்கள் எடுத்திருந்த வில் யங்கும் அஸ்வின் பந்தில் அவுட்டாகி வெளியேறினார். தற்போது, நியூசிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்து ஆடிவருகிறது.