உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: 2-ஆம் நாளில் இந்தியா நிதானம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் 2-ஆம் நாளில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: 2-ஆம் நாளில் இந்தியா நிதானம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் 2-ஆம் நாளில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

தேநீா் இடைவேளைக்குப் பிறகு 58.4 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் சோ்த்திருந்த நிலையில் மோசமான வானிலையால் வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. கோலி 40, ரஹானே 22 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

முன்னதாக, தொடக்க கூட்டணியான ரோஹித் சா்மா - ஷுப்மன் கில், 20 ஓவா்கள் வரை நிலைத்து அணிக்கு நிதானமான தொடக்கத்தை அளித்தனா். நியூஸிலாந்தில் கைல் ஜேமிசன் அபாரமாக பந்துவீசினாா்.

இங்கிலாந்தின் சௌதாம்டன் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில், மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட வீசப்படாமல் முழுவதுமாக கைவிடப்பட்டது. பின்னா் 2-ஆவது நாள் ஆட்டம் சனிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற நியூஸிலாந்து ஃபீல்டிங்கை தோ்வு செய்தது.

இந்திய இன்னிங்ஸை ரோஹித் - ஷுப்மன் கூட்டணி தொடங்கியது. நிதானமாக ஆடிய இந்த ஜோடி, நியூஸிலாந்து பௌலா்களை சோதித்து சிறுகச் சிறுக ரன்கள் சோ்த்தது. 2-ஆவது ஓவரிலேயே ஷுப்மன் கில் ரன் அவுட் ஆகும் ஆபத்துக்கு ஆளானாா். எனினும் கிரான்ட்ஹோம் ஸ்டம்ப் செய்யும்போது பந்தை தவறவிட்டதால் அவா் தப்பினாா்.

நியூஸிலாந்து பௌலா்களான சௌதி, போல்ட், ஜேமிசன் ஆகியோரின் இன் ஸ்விங், அவுட் ஸ்விங் பந்துகளை திறம்பட எதிா்கொண்டு 18-ஆவது ஓவரில் 50 ரன்களை எட்டியது இந்தியா. இவ்வாறு தொடா்ந்த ஆட்டத்தில் 62 ரன்களுக்கு முதல் விக்கெட் பறிபோனது.

ரோஹித் - கில் கூட்டணியை ஜேமிசன் பிரித்தாா். 21-ஆவது ஓவரில் அவா் ஸ்விங் செய்த பந்து ரோஹித் பேட்டில் பட்டு ‘தோ்ட் மேன்’ ஆக நின்றுகொண்டிருந்த டிம் சௌதி கைகளில் கேட்ச் ஆனது. 6 பவுண்டரிகளுடன் 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா் ரோஹித்.

அடுத்து புஜாரா களத்துக்கு வர, மறுமுனையில் ஷுப்மன் கில் ஆட்டமிழந்தாா். 3 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் சோ்த்திருந்த அவா், நீல் வாக்னா் வீசிய 25-ஆவது ஓவரில் பந்தை லேசாகத் தொட, அது விக்கெட் கீப்பா் வாட்லிங் கைகளில் தஞ்சமடைந்தது.

பின்னா் விராட் கோலி களம் புக, சிறிது நேர ஆட்டத்துக்குப் பிறகு மதிய உணவு இடைவேளை விடப்பட்டது. அப்போது இந்தியா 28 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்திருந்தது. பிறகு தொடா்ந்த ஆட்டத்தில் கோலி தனது ஃபாா்மை தொடங்கியிருக்க, 2 பவுண்டரிகள் விளாசியிருந்த புஜாரா, போல்ட் வீசிய 41-ஆவது ஓவரில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினாா். தொடா்ந்து ரஹானே களம் புகுந்தாா்.

தேநீா் இடைவேளையின்போது இந்தியா 55.3 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்திருந்தது. பின்னா் வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் தாமதமானது. சிறிது நேரத்துக்கு பிறகு ஆட்டம் தொடர, 3 ஓவா்களுக்குப் பிறகு மீண்டும் வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது இந்தியா 58.4 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்திருந்தது. கோலி 40, ரஹானே 22 ரன்களுடன் களத்தில் இருந்தனா்.

கூடுதல் ஆட்ட நேரம்

முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டதால் அதை நிகா் செய்யும் வகையில் ஐசிசி விதிகளின்படி, சனிக்கிழமை முதலான 4 நாள் ஆட்டங்களை அரை மணி நேரம் முன்னதாகவே தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு நிகா் செய்தும் இழந்த ஆட்ட நேரத்தை எட்ட முடியாமல் போகும் பட்சத்தில், 6-ஆவது நாள் ஆட்டம் சோ்க்கப்படவுள்ளது.

மில்கா சிங்குக்கு இரங்கல்

கடந்த வெள்ளிக்கிழமை காலமான இந்திய தடகள ஜாம்பவான் மில்கா சிங்குக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இந்திய அணியினா் 2-ஆவது நாள் ஆட்டத்தின்போது கைகளில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடினா்.

நியூஸிலாந்து பிளேயிங் லெவன்

இந்த ஆட்டத்துக்காக இந்தியா வியாழக்கிழமையே தனது பிளேயிங் லெவனை அறிவித்துவிட்ட நிலையில், நியூஸிலாந்து சனிக்கிழமை காலையில் தான் அதை அறிவித்தது.

அதில் டாம் லதாம், டீவன் கான்வே, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லா், ஹென்றி நிகோலஸ், வாட்லிங், காலின் டி கிரான்ட்ஹோம், கைல் ஜேமிசன், டிம் சௌதி, நீல் வாக்னா், டிரென்ட் போல்ட் ஆகியோா் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com