கிரிக்கெட்டர் சஹாவை மிரட்டிய பத்திரிகையாளர்...ஆதரவாக களமிறங்கிய சேவாக்

ஓய்வு பெறுவது குறித்து யோசிக்கும்படி அணியின் தலைமை பயற்சியாளர் டிராவிட் தன்னிடம் பேசியதாக சஹா பல்வேறு ஊடகத்திற்கு பேட்டி அளித்தார்.
சஹா
சஹா

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து மூத்த வீரர் சஹா நீக்கப்பட்ட நிலையில், பத்திரிகையாளர் ஒருவர் தனக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை அவர் பகிர்ந்துள்ளார்.

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதையடுத்து, இந்த தொடரில் பங்கேற்கவுள்ள அணி விவரம் நேற்று வெளியிடப்பட்டது. அதில், மூத்த விக்கெட் கீப்பர் சஹா அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதை தொடர்ந்து, ஓய்வு பெறுவது குறித்து யோசிக்கும்படி அணியின் தலைமை பயற்சியாளர் டிராவிட் தன்னிடம் பேசியதாக சஹா பல்வேறு ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். ஆனால், கான்பூர் டெஸ்ட் போட்டியில் 61 ரன்கள் எடுத்த பிறகு அணியில் இடம்பெறுவது குறித்து கவலை வேண்டாம் என பிசிசிஐ தலைவர் கங்குலி தனக்கு உத்தரவாதம் அளித்ததாகவும் சஹா கூறியுள்ளார்.

இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், ஒரு பத்திரிகையாளர் தனக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை சஹா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அதில், தனக்கு பேட்டி அளிக்கும்படி அந்த பத்திரிகையாளர் சஹாவிடம் கேட்டுள்ளார். "யார் சிறந்த விக்கெட் என அணி நிர்வாகம் கருதியதோ அவரில் ஒருவரை தேர்வு செய்துள்ளது. ஆனால், நீங்கள் 11 பத்திரிகையாளர்களை தேர்வு செய்துள்ளீர்கள். இது சிறந்த முடிவு என நான் நினைக்கவில்லை. யார் உங்களுக்கு சிறப்பான உதவியை செய்வோரா அவரையே தேர்வு செய்ய வேண்டும்" என முதல் குறுஞ்செய்தியில் எழுதப்பட்டிருந்தது.

பின்னர், அந்த பத்திரிகையாளர் சஹாவை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், அந்த போன் காலை சஹா எடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, அந்த பத்திரிகையாளர் இரண்டாவது குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், "நான் கால் செய்த போது நீங்கள் எடுக்கவில்லை. இனி, உங்களை நேர்காணல் எடுக்கப்போவதில்லை. இம்மாதிரியான அவமதிப்புகளை நான் தயவாக எடுத்துக்கொள்வதில்லை. இது எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். இப்படி நீங்கள் செய்திருக்கக் கூடாது" என எழுதியிருந்தார்.

இதுகுறித்து ஸ்கிரீன் ஷாட்டை ட்விட்டரில் பகிர்ந்த சஹா, "இந்திய கிரிக்கெட்டுக்கு இவ்வளவு பங்காற்றிய பிறகும்.. "மதிப்பிற்குரிய" பத்திரிக்கையாளரிடம் இருந்து நான் எதிர்கொள்வது இதுதான்! இதழியல் இந்த அளவுக்கு போய்விட்டதே" என பதிவிட்டுள்ளார்.

பத்திரிகையாளர் ஒருவர் சஹாவை மிரட்டும் தொனியில் பேசியிருப்பது ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அந்த பத்திரிகையாளரின் பெயரை சஹா குறிப்பிடவில்லை.

இதற்கு பதிலளித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக், "மிகுந்த வருத்தம். இத்தகைய உரிமையை (பத்திரிகையாளர்) அவருக்கு யார் கொடுத்தது. அவர் மதிக்கமிக்கவரும் அல்ல பத்திரிகையாளர் அல்ல. வெறும் துதிபாடுபவர்தான். உங்களுடன் எப்போதும் இருப்பேன்" என பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com