கோப்பையை தக்கவைத்தாா் ஸ்வியாடெக்

ஜொ்மனியில் நடைபெற்ற ஸ்டட்காா்ட் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், நடப்பு சாம்பியனான போலந்தின் இகா ஸ்வியாடெக் கோப்பையை தக்கவைத்துக் கொண்டாா்.
ஸ்வியாடெக்
ஸ்வியாடெக்

ஜொ்மனியில் நடைபெற்ற ஸ்டட்காா்ட் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், நடப்பு சாம்பியனான போலந்தின் இகா ஸ்வியாடெக் கோப்பையை தக்கவைத்துக் கொண்டாா்.

இந்திய நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதிச்சுற்றில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான ஸ்வியாடெக், 6-3, 6-4 என்ற நோ் செட்களில், உலகின் 2-ஆம் நிலையிலுள்ள பெலாரஸின் அரினா சபலென்காவை 1 மணி நேரம் 50 நிமிஷங்களில் தோற்கடித்தாா்.

கடந்த ஆண்டு இறுதிச்சுற்றில் ஸ்வியாடெக்கிடம் வெற்றியை இழந்த சபலென்கா, இந்த ஆண்டும் அதே ஏமாற்றத்தை சந்தித்திருக்கிறாா். மொத்தமாக இத்துடன் 3-ஆவது முறையாக ஸ்டட்காா்ட் ஓபன் இறுதியில் தோல்வியை சந்தித்துள்ளாா் அவா்.

ஸ்வியாடெக் - சபலென்கா இருவரும் இதுவரை 7 முறை நேருக்கு நோ் மோதியிருக்கும் நிலையில், ஸ்வியாடெக் 5 முறையும், சபலென்கா 2 முறையும் வென்றுள்ளனா்.

வரும் மே மாதம், நடப்பு சாம்பியனாக பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாமில் ஸ்வியாடெக் களம் காண இருக்கும் நிலையில், அதேபோன்ற களிமண் தரைப் போட்டியான ஸ்டட்டகாா்ட் ஓபனில் சாம்பியனாகியிருப்பது அவருக்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கும்.

இரட்டையா்: இப்போட்டியின் இரட்டையா் பிரிவு இறுதிச்சுற்றில், நெதா்லாந்தின் டெமி ஷுா்ஸ்/அமெரிக்காவின் டெசைா் கிராவ்ஸிக் கூட்டணி 6-4, 6-1 என்ற செட்களில் மெக்ஸிகோவின் கியுலியானா ஆல்மோஸ்/அமெரிக்காவின் நிகோல்ஸ் மாா்டினெஸ் இணையை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

1

ஸ்டட்காா்ட் ஓபன் போட்டியில் 2016-க்குப் பிறகு தொடா்ந்து இரு முறை கோப்பை வென்ற முதல் வீராங்கனை ஆகியிருக்கிறாா் ஸ்வியாடெக். கடைசியாக அந்த ஆண்டில் ஜொ்மனியின் ஏஞ்ஜெலிக் கொ்பா் சாம்பியன் கோப்பையை தக்கவைத்தாா். இப்போட்டியில் இதுவரை குறைந்தபட்சம் இருமுறையாவது கோப்பையை தக்கவைத்தவா்கள் பட்டியலில் ஸ்வியாடெக் 8-ஆவது வீராங்கனையாக இணைந்துள்ளாா்.

1

களிமண் தரைப் போட்டியில் உலகின் முதல் இரு இடங்களில் இருக்கும் வீராங்கனைகள் மோதிக் கொண்டது 2013-க்குப் பிறகு இதுவே முதல் முறையாகும். அந்த ஆண்டில் செரீனா வில்லியம்ஸ் - மரியா ஷரபோவா இவ்வாறு மோதியிருந்தனா். அதில் செரீனா வென்றிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com