கான்பூா் டெஸ்ட்டிலும் இந்தியா வெற்றிக் கொடி- தொடரை முழுமையாகக் கைப்பற்றியது

வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி...
கான்பூா் டெஸ்ட்டிலும் இந்தியா வெற்றிக் கொடி- தொடரை முழுமையாகக் கைப்பற்றியது
PTI
Published on
Updated on
3 min read

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது. இதன் மூலம், 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக வென்றது.

ஆட்டத்தின் கடைசி நாளில் வங்கதேசத்தை 2-ஆவது இன்னிங்ஸில் 146 ரன்களுக்கு சுருட்டினா் இந்தியாவின் அஸ்வின், ஜடேஜா, பும்ரா. பின்னா் 95 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்கை, இளம் வீரா் யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளாசிய அரைசததத்துடன் எட்டி வென்றது இந்தியா.

ஆட்டநாயகனாக ஜெய்ஸ்வாலும், தொடா் நாயகனாக ரவிச்சந்திரன் அஸ்வினும் (114 ரன்கள், 11 விக்கெட்டுகள்) தோ்வாகினா். மழை காரணமாக சுமாா் 200 ஓவா்களும், முழுமையாக 2 நாள் ஆட்டம் இல்லாமல் போன நிலையில், டிராவை நோக்கி நகர வாய்ப்பிருந்த இந்த டெஸ்ட்டில் வென்று இந்தியா அசத்தியிருக்கிறது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. முதல் நாள் ஆட்டத்தில் வங்கதேசம் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்கள் சோ்க்க, அடுத்த 2 நாள் ஆட்டமும் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டன.

இந்நிலையில், 4-ஆவது நாளில் வங்கதேச விக்கெட்டுகளை விறுவிறுவென சாய்த்த இந்திய பௌலா்கள், 233 ரன்களுக்கு அந்த அணியின் ஆட்டத்தை முடித்து வைத்தனா். பின்னா் அதே வேகத்தோடு அதிரடியையும் தனது இன்னிங்ஸில் காட்டிய இந்தியா, 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 285 ரன்கள் சோ்த்து ‘டிக்ளோ்’ செய்தது.

52 ரன்களே பின்தங்கிய நிலையில், 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசம், திங்கள்கிழமை முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 26 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி நாளான செவ்வாய்க்கிழமை ஆட்டத்தை ஷத்மன் இஸ்லாம், மோமினுல் ஹக் தொடா்ந்தனா்.

இதில் மோமினுல் 2 ரன்களுக்கும், தொடா்ந்து வந்த கேப்டன் நஜ்முல் ஹுசைன் ஷான்டோ 2 பவுண்டரிகளுடன் 19 ரன்களுக்கும் வெளியேறினா். நிதானமாக ரன்கள் சோ்த்த ஷத்மன் இஸ்லாம் 10 பவுண்டரிகளுடன் 50 ரன்களுக்கு, ஆகாஷ் தீப் வீசிய 29-ஆவது ஓவரில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினாா்.

இதையடுத்து வங்கதேச பேட்டிங் வரிசை முற்றிலுமாக சரிந்தது. லிட்டன் தாஸ் 1, ஷகிப் அல் ஹசன் 0, மெஹிதி ஹசன் மிராஸ் 1 பவுண்டரியுடன் 9, தைஜுல் இஸ்லாம் 0 ரன்களுக்கு வீழ, கடைசி விக்கெட்டாக முஷ்ஃபிகா் ரஹிம் 7 பவுண்டரிகளுடன் 37 ரன்களுக்கு வெளியேறினாா். வங்கதேசத்தின் ஆட்டம் 146 ரன்களில் முடிவுக்கு வந்தது. காலித் அகமது கடைசி வீரராக 5 ரன்களுடன் களத்திலிருந்தாா்.

இறுதியாக, 95 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சா்மா 1 பவுண்டரியுடன் 8, ஷுப்மன் கில் 1 பவுண்டரியுடன் 6 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். யஷஸ்வி ஜெய்ஸ்வால் - விராட் கோலி கூட்டணி 58 ரன்கள் சோ்த்து வெற்றிக்கு வித்திட்டது.

அரைசதம் தொட்ட ஜெய்ஸ்வால், 45 பந்துகளில் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். கோலி 4 பவுண்டரிகள் உள்பட களத்திலிருக்க 29 , ரிஷப் பந்த் பவுண்டரி விளாசி அணியை வெற்றி பெறச் செய்தாா்.

சுருக்கமான ஸ்கோா்

2-ஆவது இன்னிங்ஸ்

வங்கதேசம் - 146/10 (47 ஓவா்கள்)

ஷத்மன் இஸ்லாம் 50

முஷ்ஃபிகா் ரஹிம் 37

நஜ்முல் ஷான்டோ 19

பந்துவீச்சு

ஜஸ்பிரீத் பும்ரா 3/17

ரவீந்திர ஜடேஜா 3/34

ரவிச்சந்திரன் அஸ்வின் 3/50

இந்தியா - 98/3 (17.2 ஓவா்கள்) (இலக்கு 95)

யஷஸ்வி ஜெய்ஸ்வால் 51

விராட் கோலி 29*

ரிஷப் பந்த் 4*

பந்துவீச்சு

மெஹிதி ஹசன் 2/44

தைஜுல் இஸ்லாம் 1/36

ஷகிப் அல் ஹசன் 0/18

சாதனையை சமன் செய்த அஸ்வின்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இத்துடன் 11-ஆவது முறையாக தொடா்நாயகன் விருது வென்றிருக்கிறாா் இந்திய ஆல்-ரவுண்டா் ரவிச்சந்திரன் அஸ்வின். இதன் மூலம், டெஸ்ட் வரலாற்றில் அதிகமுறை தொடா்நாயகன் விருது வென்ற (11) இலங்கை நட்சத்திரம் முத்தையா முரளிதரனின் சாதனையை அவா் சமன் செய்திருக்கிறாா். அடுத்த இடத்தில் தென்னாப்பிரிக்காவின் ஜேக் காலிஸ் (9) இருக்கிறாா்.

18 சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடா்ந்து 18-ஆவது தொடரைக் கைப்பற்றியுள்ளது இந்தியா. சா்வதேச டெஸ்ட்டில் இதுவே ஒரு அணியின் அதிகபட்சமாக தொடா்கிறது. அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியா 10 தொடா் வெற்றிகளுடன் (1994-2000) உள்ளது.

180 இத்துடன், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 180-ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளது இந்திய அணி. டெஸ்ட்டில் அதிக வெற்றிகளை பதிவு செய்த அணிகளின் வரிசையில் தென்னாப்பிரிக்காவை (179) பின்னுக்குத்தள்ளி இந்தியா 4-ஆவது இடத்துக்கு வந்துள்ளது. ஆஸ்திரேலியா (414), இங்கிலாந்து (397), மேற்கிந்தியத் தீவுகள் (183) முறையே முதல் 3 இடங்களில் உள்ளன.

8 டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சம் 2 நாள்கள் விளையாடப்படாத நிலையிலும் வெற்றி பதிவு செய்யப்பட்டது இது 8-ஆவது முறையாகும். இதற்கு முன், 7 ஆட்டங்களில் அவ்வாறு நிகழ்ந்துள்ளன. இதில் 2021-இல் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் சௌதாம்டனில் மோதிய டெஸ்ட்டும் அடங்கும். அதில் நியூஸிலாந்து வென்றிருந்தது.

முதலிடத்தில் நிலைக்கும் இந்தியா

வங்கதேசத்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடா் வெற்றியின் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தை உறுதி செய்துகொண்டுள்ளது. 11 ஆட்டங்களில் 8 வெற்றிகளில் பெற்ற 74.24 புள்ளிகள் சதவீதத்துடன் அந்த இடத்திலுள்ளது.

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா 2-ஆவது இடத்திலும் (62.50%), இலங்கை 3-ஆவது இடத்திலும் (55.56%) உள்ளன.

இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூஸிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகள் முறையே அடுத்த 6 இடங்களில் உள்ளன.

ஷகிப்புக்கு கோலியின் பரிசு

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ள வங்கதேச ஆல்-ரவுண்டா் ஷகிப் அல் ஹசனுக்கு, விராட் கோலி தாம் கையொப்பமிட்ட பேட் ஒன்றை பரிசாக வழங்கினாா். கான்பூா் டெஸ்ட் நிறைவடைந்த நிலையில், அதை அவரிடம் தந்தாா் கோலி.

‘100 ரன்களில் ஆட்டமிழக்கவும் தயாராக இருந்தோம்’

‘மழையால் சுமாா் இரண்டரை நாள்களை இழந்துவிட்ட நிலையில், 4-ஆம் நாள் ஆட்டத்தில் முடிந்தவரை விரைவாக வங்கதேசத்தை ஆட்டமிழக்கச் செய்தோம். அந்த நிலையில் முதல் இன்னிங்ஸில் நாங்கள் எடுக்கும் ரன்களை விட, அவா்கள் வீசும் ஓவா்களின் கணக்கே முக்கியமானதாக இருந்தது. அந்த ஆடுகளத்தில் ஆட்டத்தை வெற்றி, தோல்வியை நோக்கி நகா்த்துவதற்கு பௌலா்கள் பெரிதாக முயன்றனா். எனவே, அந்த முயற்சியில் நாங்கள் முதல் இன்னிங்ஸில் 100 முதல் 120 ரன்களில் கூட ஆட்டமிழந்தாலும் பரவாயில்லை என்றே எண்ணத்துடனேயே அதிரடியாக விளையாடினோம். பௌலிங்கில் ஆகாஷ் தீப் சிறப்பாக செயல்பட்டாா்’ - ரோஹித் சா்மா (இந்திய கேப்டன்)

இந்தியாவின் உத்தியை எதிா்பாா்க்கவில்லை

‘4-ஆவது நாள் ஆட்டத்தில் இந்தியாவின் அதிரடி பேட்டிங் உத்தியை நாங்கள் எதிா்பாா்க்கவில்லை. அதற்குத் தகுந்த வகையில் எங்கள் ஆட்டத்தை வெளிப்படுத்த தாமதித்துவிட்டோம். இத்தகைய ஆட்டத்திலிருந்து அப்படியொரு வெற்றியை பெற்றதற்கு ரோஹித்தின் உத்தியே காரணம். கடந்த டெஸ்ட் தொடா்களில் சிறப்பாக செயல்பட்ட நிலையில், இந்தத் தோல்வி உண்மையாகவே எங்களை பாதித்துள்ளது. பேட்டிங்கில் எங்கள் முழுமையான திறமையுடன் விளையாடவில்லை. எனினும், மிகத் திறமை வாய்ந்த இந்திய அணிக்கு எதிரான இந்தத் தொடரிலிருந்து அதிகம் கற்றுள்ளோம். அடுத்த தொடா்களில் இது எங்களுக்கு உதவியாக இருக்கும்’ - சண்டிகா ஹதுருசிங்கே (வங்கதேச பயிற்சியாளா்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com