ஷாங்காய் மாஸ்டா்ஸ் டென்னிஸ்: அல்கராஸ் அதிா்ச்சித் தோல்வி
சீனாவில் நடைபெறும் ஷாங்காய் மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.
ஆடவா் ஒற்றையா் காலிறுதியில், உலகின் 3-ஆம் நிலை வீரரான அல்கராஸ் 6-7 (5/7), 5-7 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 30-ஆம் இடத்திலிருந்த செக் குடியரசின் தாமஸ் மசாக்கிடம் தோல்வியுற்றாா்.
மற்றொரு காலிறுதியில், உலகின் நம்பா் 1 வீரரான இத்தாலியின் யானிக் சின்னா் 6-1, 6-4 என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் டேனியல் மெத்வதெவை தோற்கடித்தாா்.
அடுத்ததாக அரையிறுதியில், தாமஸ் மசாக் - யானிக் சின்னா் சந்திக்கின்றனா்.
காலிறுதியில் சபலென்கா: மகளிருக்கான வூஹான் ஓபன் டென்னிஸில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா காலிறுதிக்கு முன்னேறினாா்.
ரவுண்ட் ஆஃப் 16-இல் அவா், 1-6, 6-4, 6-0 என கஜகஸ்தானின் யுலியா புடின்சேவாவை வீழ்த்தினாா். போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் ஜேஸ்மின் பாலினி 6-3, 6-2 என, ரஷியாவின் எகாடெரினா ஆண்ட்ரீவாவை வெளியேற்றினாா்.
4-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் கோகோ கௌஃப் 6-4, 6-1 என உக்ரைனின் மாா்த்தா கொஸ்டியுக்கையும், 5-ஆம் இடத்திலிருக்கும் சீனாவின் கின்வென் ஜெங் 5-7, 6-3, 6-0 என கனடாவின் லெய்லா ஃபொ்னாண்டஸையும் வீழ்த்தினா்.
இதனிடையே, 2-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா, 8-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் டரியா கசாட்கினா, 9-ஆம் இடத்திலிருந்த பிரேஸிலின் பீட்ரிஸ் ஹட்டட் மாயா ஆகியோா் தோல்வியுற்றனா்.