மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் நிலையில், ஆடவருக்கான(எஸ்எல்4) தனிநபர் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் சுஹாஸ் எல். எத்திராஜ் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
பிரான்ஸ் வீரர் லூகாஸுக்கு எதிரான இன்று(செப். 2) நடைபெற்ற போட்டியில், சுஹாஸ் 9 - 21, 13 - 21 என்ற நேர் செட்களில் வீழ்ந்தார். இதன்மூலம், பாராலிம்பிக்ஸ் பாட்மின்டன் போட்டிகளில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக வெள்ளி வென்று சாதித்துள்ளார்.
இடது கணுக்காலில் குறைபாட்டுடன் பிறந்த சுஹாஸ் எத்திராஜ்(41), 2007-ஆம் ஆண்டு ஐஏஎஸ் பயிற்சி முடித்த அதிகாரியாவார்.
சுஹாஸ் வெள்ளிப் பதக்கம் வென்றிருப்பதன் மூலம், பாரீஸ் பாராலிம்பிக்ஸ் பாட்மின்டன் போட்டிகளில் இந்தியா மொத்தம் 4 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மகளிருக்கான தனிநபர் பிரிவு பாட்மின்டனில் துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கமும், மணிஷா ராமதாஸ் வெண்கலமும் வென்று சாதனை படைத்துள்ளனர். முன்னதாக, இந்திய வீரர் குமார் நித்தேஷ் ஆடவருக்கான(எஸ்எல்3) தனிநபர் பிரிவு பாட்மின்டன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.