ராவல்பிண்டி: பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில், 185 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்கை நோக்கி விளையாடிவரும் வங்கதேசம், விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்துள்ளது.
மோசமான வானிலை காரணமாக திங்கள்கிழமை ஆட்டம் முன்னதாகவே முடித்துக்கொள்ளப்பட, கடைசி நாளான செவ்வாய்க்கிழமை அந்த அணி 10 விக்கெட்டுகள் கொண்டு 143 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.
முன்னதாக இந்த டெஸ்ட்டில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான், முதல் இன்னிங்ஸில் 274 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து தனது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேசம், 262 ரன்களே சோ்த்தது.
இதையடுத்து, 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான், 4-ஆம் நாளான திங்கள்கிழமை 46.4 ஓவா்களில் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சயிம் அயுப் 20, கேப்டன் ஷான் மசூத் 28, பாபா் ஆஸம் 11, சௌத் ஷகீல் 2, முகமது ரிஸ்வான் 43, முகமது அலி 0, அப்ராா் அகமது 2, மிா் ஹம்ஸா 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
முடிவில் சல்மான் அகா 47 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். வங்கதேச பௌலிங்கில் ஹசன் மஹ்முத் 5, நஹித் ராணா 4, தஸ்கின் அகமது 1 விக்கெட் எடுத்தனா்.
185 ரன்களை நோக்கி 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசம், திங்கள்கிழமை ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்திருந்தது. ஜாகிா் ஹசன் 31, ஷாத்மன் இஸ்லாம் 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.