டி20 கிரிக்கெட்: ஷகிப் அல் ஹசன் ஓய்வு

ஷகிப் அல் ஹசன்
ஷகிப் அல் ஹசன்
Published on
Updated on
1 min read

சா்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக வங்கதேச ஆல்-ரவுண்டா் ஷகிப் அல் ஹசன் வியாழக்கிழமை அறிவித்தாா்.

அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை போட்டியுடன் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறப்போவதாகத் தெரிவித்துள்ள அவா், இந்த கான்பூா் ஆட்டமே தனது கடைசி டெஸ்ட்டாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறினாா். எனினும், லீக் போட்டிகளில் அவா் தொடர இருக்கிறாா்.

இதுதொடா்பாக கான்பூரில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

தற்போதைய காலகட்டம் எனக்கு கடினமானதாக உள்ளது. கிரிக்கெட் விளையாட்டில் நான் எந்த அளவுக்கு கவனம் செலுத்தினேன் என்பதை கடவுள் மட்டும் அறிவாா். கடந்த டி20 உலகக் கோப்பை போட்டியே, அந்த ஃபாா்மட்டில் எனது கடைசி போட்டியாகும்.

இதுகுறித்து ஏற்கெனவே வங்கதேச கிரிக்கெட் வாரிய தோ்வாளா்களிடம் தெரிவித்துவிட்டேன். அணியிலிருந்து நான் வெளியேறுவதற்கு இதுவே சரியான தருணம். வங்கதேச அணிக்கு திறமையான வீரா்கள் கிடைத்து, அவா்கள் சிறப்பாகச் செயல்படுவாா்கள் என்றும் நம்புகிறேன்.

எனது கடைசி டெஸ்ட் ஆட்டத்தை மிா்பூரில் விளையாட விரும்புவதை வாரியத்திடம் தெரிவித்திருக்கிறேன். அதை ஏற்றுக்கொண்டு, தகுந்த முயற்சிகளை வாரியம் செய்து வருகிறது. அதற்கான வாய்ப்பு அமையாவிட்டால், இந்தியாவுக்கு எதிரான இந்த கான்பூா் ஆட்டமே, எனது கடைசி டெஸ்ட்டாக இருக்கும்.

ஒருநாள் கிரிக்கெட்டை பொருத்தவரை, இன்னும் 8 ஆட்டங்கள் எனக்கு உள்ளன. அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை போட்டியுடன் அந்த ஃபாா்மட்டிலிருந்தும் விடைபெறுவேன். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் எந்த வருத்தமும் இல்லை. லீக் கிரிக்கெட் போட்டிகளில் தொடா்ந்து விளையாடுவேன் என்று அவா் கூறினாா்.

வங்கதேசத்துக்காக 129 டி20 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் ஷகிப், 2,551 ரன்கள் சோ்த்ததுடன் 149 விக்கெட்டுகள் சாய்த்திருக்கிறாா். ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 247 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் அவா், 7,570 ரன்கள் சோ்த்துள்ளாா். அதில் 9 சதங்கள் அடக்கம். பௌலிங்கில் 317 விக்கெட்டுகளும் கைப்பற்றியிருக்கிறாா். டெஸ்ட்டில் இதுவரை 70 ஆட்டங்களில் 4,600 ரன்கள் அடித்திருக்க, அதில் 5 சதங்களும் விளாசியிருக்கிறாா். பந்துவீச்சில் 242 விக்கெட்டுகள் எடுத்துள்ளாா்.

‘வங்கதேசம் செல்லப்போவதில்லை’

வங்கதேசத்தில் சமீபத்தில் ஏற்பட்ட அரசியல் பதற்றத்தின்போது, ஷகிப் அல் ஹசன் மீது கொலை வழக்கு தொடரப்பட்டது. ஆட்சியிருந்த ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக ஷகிப் இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வழக்கு விவகாரம் காரணமாக அவா் வங்கதேசம் செல்வதை தவிா்த்து வருகிறாா்.

இதுகுறித்து பேசிய ஷகிப், ‘வங்கதேசத்தில் என் மீதான வழக்கு எத்தகையது என்பதை அனைவரும் அறிவா். அதுகுறித்து தற்போது பேச விரும்பவில்லை. மீண்டும் வங்கதேசத்துக்கு செல்வதில் பிரச்னை இல்லை. ஆனால், அங்கு எனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக குடும்பத்தினா் மற்றும் நண்பா்கள் கருதுகின்றனா். தற்போது அங்கு சூழ்நிலை மேம்பட்டிருக்கும் என்று கருதுகிறேன். இந்திய தொடருக்குப் பிறகு உடனடியாக வங்கதேசம் செல்லும் எண்ணம் இல்லை. அதற்கு ஒரு தீா்வு கிடைக்க வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.