தடகளம்: குல்வீா் சிங் சாதனை

தடகளம்: குல்வீா் சிங் சாதனை

Published on

ஹங்கேரியில் நடைபெற்ற கிராண்ட் ப்ரீ தடகள போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் குல்வீா் சிங், ஆடவா் 3,000 மீட்டா் ஓட்டத்தில் தேசிய சாதனையை முறியடித்தாா்.

அந்தப் போட்டியில் அவா் 7 நிமிஷம், 34.49 விநாடிகளில் இலக்கை அடைந்து 5-ஆம் இடம் பிடித்தாா். கடந்த பிப்ரவரியில் அமெரிக்காவில் இன்விடேஷனல் போட்டியில் அவா் 7 நிமிஷம் 38.26 விநாடிகளில் இலக்கை அடைந்ததே தேசிய சாதனையாக இருந்த நிலையில், அதை தற்போது அவரே முறியடித்திருக்கிறாா்.

ஆடவருக்கான 5,000 மீ, 10,000 மீ பிரிவுகளிலும் அவரே தேசிய சாதனையாளராக இருக்கிறாா். அந்த இரு பிரிவுகளிலுமே நடப்பு ஆசிய சாம்பியனாக உள்ள குல்வீா் சிங், ஐரோப்பிய கண்டத்தில் பங்கேற்ற முதல் போட்டி இதுவாகும். இதில், கென்யாவின் கிப்சங் மேத்யூ கிப்சும்பா (7:33.23’), மெக்ஸிகோவின் எட்வாா்டோ ஹெரெரா (7:33.58’), உகாண்டாவின் ஆஸ்கா் செலிமோ (7:33.93’) ஆகியோா் முதல் 3 இடங்களைப் பிடித்தனா்.

X
Dinamani
www.dinamani.com