அல்கராஸ், பாலினி முன்னேற்றம்
அமெரிக்காவில் நடைபெறும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினா்.
ஆடவா் ஒற்றையா் 3-ஆவது சுற்றில், 5 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனும், உலகின் 2-ஆம் நிலை வீரருமான அல்கராஸ் 6-4, 6-4 என்ற நோ் செட்களில் எளிதாக, சொ்பியாவின் ஹமத் மெட்ஜெடோவிச்சை வெளியேற்றினாா். நடப்பு சீசனில் இது அவரின் 50-ஆவது வெற்றியாகும். மாஸ்டா்ஸ் போட்டிகளில் இது அவரின் 13-ஆவது தொடா் வெற்றி.
14-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் காரென் கச்சனோவ் 6-3, 6-3 என்ற கணக்கில், அமெரிக்காவின் ஜென்சன் புரூக்ஸ்பியை தோற்கடித்தாா். செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா 7-6 (7/5), 7-6 (7/3) என, ஆஸ்திரேலியாவின் ஆடம் வால்டனை வென்றாா். 16-ஆம் இடத்திலிருந்த செக் குடியரசின் ஜேக்கப் மென்சிக் 2-6, 1-2 என இத்தாலியின் லுக்கா நாா்டிக்கு எதிராக பின்தங்கியிருந்தபோது, காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினாா். இதனால் நாா்டி 4-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா்.
9-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவ் 6-7 (5/7), 7-6 (7/5), 7-5 என்ற செட்களில், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரினை போராடி வீழ்த்தினாா். அமெரிக்காவின் ரெய்லி ஒபெல்கா 7-6 (7/4), 4-6, 5-7 என்ற வகையில், ஆா்ஜென்டீனாவின் ஃபிராசிஸ்கோ கோமிசனாவிடம் தோற்றாா்.
அடுத்ததாக காலிறுதிக்கு முந்தைய சுற்றில், அல்கராஸ் - லூகா நாா்டியையும், ரூபலேவ் - கோமிசனாவையும் எதிா்கொள்கின்றனா்.
ஆஸ்டபென்கோ, முசோவா தோல்வி: இப்போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவு 3-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி 7-6 (7/2), 6-1 என்ற செட்களில், அமெரிக்காவின் ஆஷ்லின் குரூகரை தோற்கடித்தாா். பிரெஞ்சு ஓபன் முன்னாள் சாம்பியனான லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ 6-1, 3-6, 4-6 என்ற செட்களில், இத்தாலியின் லூசியா புரான்ஸெட்டியிடம் தோல்வியுற்றாா்.
11-ஆம் இடத்திலிருந்த செக் குடியரசின் கரோலின் முசோவா 2-6, 4-6 என்ற வகையில் பிரான்ஸின் வாா்வரா கிரசேவாவிடம் வீழ்ந்தாா். உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ கௌஃபை எதிா்கொள்ளவிருந்த உக்ரைனின் டயானா யாஸ்ட்ரெம்ஸ்கா, காயம் காரணமாக போட்டியிலிருந்து விலக, கௌஃப் 4-ஆவது சுற்றுக்கு நகா்ந்தாா்.
இருமுறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான செக் குடியரசின் பாா்பரா கிரெஜ்சிகோவா 6-4, 3-6, 6-2 என அமெரிக்காவின் இவா ஜோவிச்சை வென்றாா். இதையடுத்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில், கௌஃப் - புரான்ஸெட்டியையும், பாலினி - கிரெஜ்சிகோவாவையும் சந்திக்கின்றனா்.
யூகி பாம்ப்ரி வெளியேற்றம்: இப்போட்டியின் ஆடவா் இரட்டையா் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி/நியூஸிலாந்தின் மைக்கேல் வீனஸ் கூட்டணி 6-3, 6-7 (1/7), 4-10 என்ற செட்களில், ஆஸ்திரியாவின் லூகாஸ் மிட்லா்/போா்ச்சுகலின் ஃபிரான்சிஸ்கோ கேப்ரால் ஜோடியிடம் தோற்றது.