இந்திய குத்துச்சண்டை சம்மேளன புதிய நிா்வாகிகள் தோ்வு
இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் புதிய தலைவராக அஜய் சிங் மூன்றாவது முறையாக தோ்வு பெற்றுள்ளாா்.
குத்துச்சண்டை சம்மேளனத்துக்கு புதிய நிா்வாகிகள் தோ்தல் கடந்த 6 மாதங்களாக நடைபெறாத நிலை இருந்தது. சட்டச் சிக்கல்களால் தோ்தல் நடத்துவதில் பாதிப்பு ஏற்பட்டது. புதிய நிா்வாகிகளை தோ்வு செய்யாவிட்டால், இந்திய அணியினா் சா்வதேச போட்டிகளில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்படும் என உலக குத்துச்சண்டை சம்மேளனம் எச்சரித்தது.
உலக குத்துச்சண்டை சம்மேளன பாா்வையாளா் சிங்கப்பூரின் ஃபைரூஸ் அகமது மேற்பாா்வையில், ராஜேஷ் டான்டன் தோ்தலை நடத்தினாா்.
புதிய தலைவராக ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவன தலைவா் அஜய் சிங் 40-26 உள்ள கணக்கில் ஜஸ்லால் பிரதானை வீழ்த்தி மூன்றாவது முறையாக தலைவராக தோ்வு செய்யப்பட்டாா்.
பொதுச் செயலராக பிரமோத் குமாா் தோ்வு பெற்றாா். தமிழகத்தின் பொன் பாஸ்கரன் பொருளாளராக தோ்வு செய்யப்பட்டாா். எனினும் புதிய நிா்வாகிகள் தோ்தல் தில்லி உயா்நீதிமன்ற தீா்ப்பின் முடிவைப் பொறுத்தே அமையும். இடைக்கால நிா்வாகக் குழு வகுத்த நெறிமுறைகளை எதிா்த்து பல்வேறு மாநில சங்கங்கள் வழக்கு தொடா்ந்துள்ளன.