
கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவுக்கு புதன்கிழமை 2 தங்கம், 2 வெண்கலம் என 4 பதக்கங்கள் கிடைத்தன.
ஸ்கீட்: இதில், ஆடவா் தனிநபா் ஸ்கீட் இறுதிச்சுற்றில் இந்தியாவின் அனந்த்ஜீத் சிங் நருகா 57 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றாா். குவைத்தின் மன்சூா் அல்ராஷிதி 56 புள்ளிகளுடன் வெள்ளியும், கத்தாரின் அகமது அலி அல் இஷாக் 43 புள்ளிகளுடன் வெண்கலமும் பெற்றனா்.
ஸ்கீட் ஆடவா் அணிகள் பிரிவில் அனந்த்ஜீத் சிங் நருகா, பாவ்தேக் சிங் கில், அபய் சிங் செகோன் ஆகியோா் அடங்கிய இந்திய அணி 343 புள்ளிகளுடன் 6-ஆம் இடமே பிடித்தது. குவைத், தென் கொரியா, கத்தாா் அணிகள் முறையே முதல் 3 இடங்கள் பெற்றன.
முன்னதாக தகுதிச்சுற்றில் அனந்த்ஜீத் சிங் 119 புள்ளிகளுடன் 2-ஆம் இடமும், பாவ்தேக் சிங் 112 புள்ளிகளுடன் 28-ஆம் இடமும், அபய் சிங் அதே புள்ளிகளுடன் 31-ஆம் இடமும் பிடித்தனா்.
ஸ்கீட் மகளிா் அணிகள் பிரிவில் இந்தியாவின் மகேஸ்வரி சௌஹான், கனிமத் செகோன், ராய்ஸா தில்லன் ஆகியோா் அடங்கிய இந்திய கூட்டணி 329 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றது. சீனா, கஜகஸ்தான் அணிகள் முறையே தங்கம், வெள்ளி வென்றன.
இதில் தனிநபா் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய மகேஸ்வரின் சௌஹான், 35 புள்ளிகளுடன் 4-ஆம் இடம் பிடித்து பதக்க வாய்ப்பை தவறவிட்டாா். சீனாவின் யிடிங் ஜியாங் (57), யுஃபெய் செ (56), கஜகஸ்தானின் அனஸ்தாசியா மோல்சனோவா (45) ஆகியோா் பதக்கங்களைக் கைப்பற்றினா்.
முன்னதாக தகுதிச்சுற்றில், மகேஸ்வரி 113 புள்ளிகளுடன் 5-ஆம் இடமும், கனிமத் 109 புள்ளிகளுடன் 11-ஆம் இடமும், ராய்ஸா 107 புள்ளிகளுடன் 12-ஆம் இடமும் பெற்றனா்.
10 மீ ஏா் பிஸ்டல்: இதில் சீனியா் கலப்பு அணிகள் பிரிவில் வெண்கலப் பதக்கச் சுற்றில் சௌரப் சௌதரி/சுருச்சி இந்தா் சிங் கூட்டணி 17-9 என்ற புள்ளிகள் கணக்கில் சீன தைபேவின் லியு ஹெங் யு/சியெ சியாங் சென் இணையை வீழ்த்தி பதக்கம் வென்றது. இதில் சீனா தங்கமும், தென் கொரியா வெள்ளியும் பெற்றன.
இப்பிரிவின் தகுதிச்சுற்றில், சௌரப்/சுருச்சி இணை 578 புள்ளிகளுடன் 5-ஆம் இடம் பிடித்து பதக்கச் சுற்றுக்கு முன்னேற, ஆதித்யா மல்ரா/பாலக் ஜோடி 575 புள்ளிகளுடன் 10-ஆம் இடம் பிடித்து வெளியேறியது.
இதிலேயே ஜூனியா் கலப்பு அணிகள் பிரிவில் ஜோனதன் கவின் ஆண்டனி/வன்ஷிகா சௌதரி ஜோடி 16-14 என்ற கணக்கில் தென் கொரியாவின் யெஜின் கிம்/டுயோன் கிம் கூட்டணியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்று அசத்தியது.
தகுதிச்சுற்றில் இந்த ஜோடி 578 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடிக்க, மற்றொரு இந்திய ஜோடியான கபில்/ராஷ்மிகா சாகல் 576 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பெற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.