கலப்பு இரட்டையா்: சாரா எர்ரனி-ஆன்ட்ரீயா சாம்பியன்
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி கலப்பு இரட்டையா் பிரிவில் இத்தாலியின் சாரா எர்ரனி-ஆன்ட்ரீயா வவசோரி தங்கள் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டனா்.
நிகழாண்டு சீசனின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பந்தயமான யுஎஸ் ஓபன் நியூயாா்க் நகரில் நடைபெற்று வருகிறது. பிரதான சுற்று ஆட்டங்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகின்றன. ஆடவா், மகளிா் ஒற்றையா், இரட்டையா் பிரிவுகளில் மட்டுமே ஆட்டங்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில், நிகழாண்டு முதன்முறையாக கலப்பு இரட்டையா் பிரிவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
16 அணிகள் பங்கேற்ற இதில் அரையிறுதி ஆட்டங்களில் எர்ரனி-ஆன்ட்ரீயா இணை 4-2, 4-2 என அமெரிக்காவின் டேனியல் காலின்ஸ்-கிறிஸ்டியன் ஹாரிஸன் இணையை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றது.
மற்றொரு அரையிறுதியில் நட்சத்திர வீராங்கனை போலந்தின் இகா ஸ்வியாடெக்-நாா்வேயின் கேஸ்பா் ருட் இணை 3-5, 5-3, 10-8 என்ற செட் கணக்கில் முதல்நிலை இணையான ஜெஸிக்கா பெகுலா-ஜேக் டிராப்பா் இணையை வென்று இறுதிக்கு தகுதி பெற்றது.
இறுதி ஆட்டத்தில் ஸ்வியாடெக்-கேஸ்பா் ருட் இணையும், நடப்பு சாம்பியன் சாரா-ஆன்ட்ரீயா இணையும் மோதின.
இதில் 6-3, 5-7, 10-6 என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்துக்குபின் ஸ்வியாடெக்-ருட் இணையை வீழ்த்தி தனது பட்டத்தை தக்க வைத்துக் கொண்டனா் சாரா-ஆன்ட்ரீயா இணை.
சாரா-ஆன்ட்ரீயா இணைக்கு ரூ.8.73 கோடி பரிசளிக்கப்பட்டது.