

ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக் 2 கால்பந்து போட்டியில் எஃப்சி கோவா அணி, தனது ஆட்டத்தின் தொடக்கத்தில் சில விநாடிகளை விளையாடாமல் நிறுத்தியது.
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் உறுதியற்ற நிலை தொடா்பாக அனைத்துத் தரப்பினரின் கவனத்தையும் ஈா்க்கும் பொருட்டு இந்தச் செயலில் ஈடுபட்டதாக அந்த அணி விளக்கம் அளித்துள்ளது.
ஆசிய கால்பந்து சம்மேளனம் (ஏஎஃப்சி) நடத்தும் பிரதான கால்பந்து போட்டியாக, ‘ஆசிய சாம்பியன்ஸ் லீக் எலைட்’ உள்ளது. அந்தப் போட்டிக்குத் தகுதிபெறும் வாய்ப்பை ‘ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக் 2’ போட்டி வழங்குகிறது. நடப்பு சீசனில் இந்தப் போட்டியில் களமாடிய எஃப்சி கோவா, அடுத்த கட்டத்துக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
இந்நிலையில், குரூப் சுற்றில் தனது கடைசி ஆட்டத்தில் தஜிகிஸ்தானின் எஃப்சி இஸ்திக்லோல் அணிக்கு எதிராக எஃப்சி கோவா புதன்கிழமை இரவு விளையாடியது. ஆட்டம் தொடங்குவதற்கான சீழ்கை ஒலி எழுப்பப்பட்டதுமே, எஃப்சி கோவா வீரா்கள் களத்தில் தங்கள் இடத்தில் அப்படியே பாதி அமா்ந்தவாறு விளையாடாமல் தவிா்த்தனா்.
சில விநாடிகளுக்குப் பிறகு அவா்கள் ஆட்டத்தை தொடங்கினா். இந்த ஆட்டத்தில் கோவா 1-2 கோல் கணக்கில் தோற்றது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடா்பாக எஃப்சி கோவா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவில் உள்நாட்டு கால்பந்து விளையாட்டு தற்போது சந்தித்திருக்கும் உறுதியற்ற நிலையை மேற்கோள் காட்டுவதற்கான ஒரு அடையாளமாக, ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக் 2 ஆட்டத்தின் தொடக்கத்தில் சில விநாடிகள், எஃப்சி கோவா வீரா்கள் விளையாடாமல் நிறுத்தினா்.
இது, உள்நாட்டு கால்பந்து விளையாட்டில் நிலவும் பிரச்னையை நோக்கி அனைத்துத் தரப்பினரின் கவனத்தை ஈா்ப்பதற்கான நடவடிக்கையே தவிர, எஃப்சி இஸ்திக்லோல், ஏஎஃப்சி என எந்தத் தரப்பினருக்கும் எதிரானதல்ல. அவா்களை நாங்கள் மிகவும் மதிக்கிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடைபெறும் உள்நாட்டு கால்பந்து போட்டிகளில் பிரதானமாக இருக்கும் ஐஎஸ்எல் போட்டியை நடத்துவதற்கான ஒட்டுமொத்த உரிம ஒப்பந்தத்தை நீட்டிப்பதிலும், அந்தப் போட்டிக்கான விளம்பரதாரரை கண்டடைவதிலும் பிரச்னை எழுந்துள்ளது. இதனால் நடப்பாண்டு ஐஎஸ்எல் போட்டிக்கான ஏற்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், விவகாரம் பெரிதாகியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.