

எகிப்தில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் குர்பிரீத் சிங் திங்கள்கிழமை வெள்ளிப் பதக்கம் வென்றார்.
25 மீட்டர் சென்டர் ஃபயர் பிஸ்டல் பிரிவில் 3 நிலைகளின் முடிவில் குர்பிரீத் சிங், உக்ரைனின் பாவ்லோ கொரொஸ்டிலோவ் ஆகியோர் தலா 584 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். எனினும், இலக்கின் மையப் பகுதியை (10) துல்லியமாக 29 முறை சுட்டதன் பேரில் கொரொஸ்டிலோவ் முதலிடம் பெற்றவராக அறிவிக்கப்பட்டு தங்கம் வென்றார்.
குர்பிரீத் சிங் 18 முறையே அந்த மையப் பகுதியை சுட்டதால், 2-ஆம் இடம் பிடித்து வெள்ளி பெற்றார். பிரான்ஸின் யான் பியரி லூயிஸ் 583 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றார்.
உலக சாம்பியன்ஷிப்பில் குர்பிரீத்துக்கு இது 2-ஆவது தனிநபர் பதக்கமாகும். களத்திலிருந்த மற்ற இந்தியர்களில் ஹர்பிரீத் சிங் 577 புள்ளிகளுடன் 9-ஆம் இடம் பிடிக்க, சஹில் செüதரி 561 புள்ளிகளுடன் 27-ஆம் இடம் பிடித்தார்.
இதிலேயே அணிகள் பிரிவில் குர்பிரீத், ஹர்பிரீத், சஹில் அடங்கிய இந்திய அணி 1,722 புள்ளிகளுடன் 5-ஆம் இடம் பெற்றது. இத்துடன் போட்டியை நிறைவு செய்த இந்தியா, 3 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் என 13 பதக்கங்களுடன் 3}ஆம் இடம் பிடித்தது.
சீனா 12 தங்கம், 7 வெள்ளி, 4 வெண்கலம் என 21 பதக்கங்களுடன் முதலிடமும், தென் கொரியா 7 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என 14 பதக்கங்களுடன் 2-ஆம் இடமும் பிடித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.