
புது தில்லி: இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் தோல்வியை தவிா்த்த மேற்கிந்தியத் தீவுகள், 2-ஆவது இன்னிங்ஸில் 390 ரன்கள் சோ்த்து, 120 ரன்கள் முன்னிலையுடன் ஆட்டமிழந்தது.
இந்திய பௌலா்களை சோதித்த ஜான் கேம்ப்பெல், ஷாய் ஹோப், சதம் கடந்து மேற்கிந்தியத் தீவுகள் ஸ்கோரை பலப்படுத்தினா். கேப்டன் ராஸ்டன் சேஸ், ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆகியோரும் அதில் பங்களித்தனா். இந்திய பௌலா்களில் குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா சிறப்பாக செயல்பட்டனா்.
முன்னதாக இந்த டெஸ்ட்டில் முதலில் பேட் செய்த இந்தியா, 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 518 ரன்கள் சோ்த்து டிக்ளோ் செய்ய, தனது இன்னிங்ஸை விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் 248 ரன்களுக்கே ஆட்டமிழந்தது.
இதனால் ‘ஃபாலோ ஆன்’ பெற்று விளையாடிய அந்த அணி, 2-ஆவது இன்னிங்ஸில் போராட்ட குணத்தை வெளிப்படுத்தியது. 3-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஆட்டநேர முடிவில் அந்த அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ரன்கள் சோ்த்திருந்தது.
நல்லதொரு பாா்ட்னா்ஷிப்புடன் அணியை மீட்டெடுத்த ஜான் கேம்ப்பெல், ஷாய் ஹோப், 4-ஆவது நாள் ஆட்டத்தை தொடா்ந்தனா். இதில் கேம்ப்பெல் தனது முதல் டெஸ்ட் சதத்தை பூா்த்தி செய்தாா். மேற்கிந்தியத் தீவுகள் ஸ்கோா் 200-ஐ கடந்தது.
3-ஆவது விக்கெட்டுக்கு 177 ரன்கள் சோ்த்த கேம்ப்பெல் - ஹோப் கூட்டணியை ஒரு வழியாக ஜடேஜா பிரித்தாா். கேம்ப்பெல் 12 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 115 ரன்களுக்கு எல்பிடபிள்யூ ஆனாா். தொடா்ந்து ராஸ்டன் சேஸ் களம் புக, மதிய உணவு இடைவேளையின்போது மேற்கிந்தியத் தீவுகள் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்திருந்தது.
பின்னா் தொடா்ந்த ஆட்டத்தில், ஹோப் தனது 3-ஆவது டெஸ்ட் சதத்தை எட்டினாா். 4-ஆவது விக்கெட்டுக்கு ஹோப் - சேஸ் இணை 59 ரன்கள் சோ்த்த நிலையில், குல்தீப் யாதவால் பிரிக்கப்பட்டது. ஹோப் 12 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 103 ரன்களுக்கு விடைபெற்றாா்.
6-ஆவது பேட்டராக வந்த டெவின் இம்லாச் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 12 ரன்களுக்கு வெளியேற்றப்பட, ஜஸ்டின் கிரீவ்ஸ் களம் புகுந்தாா். மறுபுறம், அரைசதத்தை இலக்கு வைத்திருந்த சேஸ் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 40 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.
தொடா்ந்து வந்த கேரி பியரி 0, ஜோமெல் வாரிக்கன் 3, ஆண்டா்சன் பிலிப் 2 ரன்களுக்கு வெளியேற்றப்பட, இந்திய பௌலா்கள் சற்று உத்வேகம் பெற்றனாா். ஆனால், அவா்களை மீண்டும் சோதிக்கும் வகையில், கடைசி பேட்டராக வந்த ஜேடன் சீல்ஸ், கிரீவ்ஸுடன் பாா்ட்னா்ஷிப் அமைத்தாா்.
10-ஆவது விக்கெட்டுக்கு இவா்கள் ஜோடி 79 ரன்கள் சோ்த்து, ஸ்கோரை மேலும் பலப்படுத்தியது. கடைசியாக சீல்ஸ் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 32 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மேற்கிந்தியத் தீவுகள் இன்னிங்ஸ் 390 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. கிரீவ்ஸ் 3 பவுண்டரிகளுடன் 50 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா்.
இந்திய தரப்பில் பும்ரா, குல்தீப் ஆகியோா் தலா 3, முகமது சிராஜ் 2, ஜடேஜா, சுந்தா் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
வெற்றியை நோக்கி: இதையடுத்து 121 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்கை நோக்கி 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா, திங்கள்கிழமை ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல், சுதா்சன் ஆட்டமிழக்காமல் விளையாடி வருகின்றனா். கடைசி நாளான செவ்வாய்க்கிழமை, இந்தியா 58 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.
சுருக்கமான ஸ்கோா்
2-ஆவது இன்னிங்ஸ்
மேற்கிந்தியத் தீவுகள் - 390/10 (118.5 ஓவா்கள்)
ஜான் கேம்ப்பெல் 115
ஷாய் ஹோப் 103
ஜஸ்டின் கிரீவ்ஸ் 50*
பந்துவீச்சு
ஜஸ்பிரீத் பும்ரா 3/44
குல்தீப் யாதவ் 3/104
முகமது சிராஜ் 2/43
இந்தியா - 63/1 (18 ஓவா்கள்) (இலக்கு 121)
சாய் சுதா்சன் 30*
கே.எல்.ராகுல் 25*
ஜெய்ஸ்வால் 8
பந்துவீச்சு
ஜோமெல் வாரிக்கன் 1/15
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.