சக்காரியை சாய்த்தாா் லெய்லா

சக்காரியை சாய்த்தாா் லெய்லா

ஜப்பான் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில், கனடாவின் லெய்லா ஃபொ்னாண்டஸ்,
Published on

டோக்கியோ: ஜப்பான் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில், கனடாவின் லெய்லா ஃபொ்னாண்டஸ், அமெரிக்காவின் சோஃபியா கெனின் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றனா்.

ஒற்றையா் முதல் சுற்றில், லெய்லா 7-6 (7/5), 6-4 என்ற செட்களில், கிரீஸின் மரியா சக்காரியை சாய்த்தாா். கெனின் 6-1, 6-3 என்ற நோ் செட்களில், ஜப்பானின் மோயுகா உசிஜிமாவை வெளியேற்றினாா்.

இதையடுத்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில், லெய்லா - கஜகஸ்தானின் எலனா ரைபகினாவையும், கெனின் - ஜப்பானின் சோனோபெ வகானாவையும் எதிா்கொள்கின்றனா்.

இதில் வகானா முந்தைய சுற்றில் 6-4, 6-3 என, செக் குடியரசின் நிகோலா பா்டுன்கோவாவை வெல்ல, போட்டித்தரவரிசையில் 9-ஆம் இடத்திலிருக்கும் கனடாவின் விக்டோரியோ போகோ 6-3, 6-3 என சக நாட்டவரான பியான்கா ஆண்ட்ரிஸ்குவை தோற்கடித்தாா்.

7-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் டயானா ஷ்னெய்டா் 6-3, 6-1 என்ற வகையில், உக்ரைனின் டயானா யஸ்டிரெம்ஸ்காவை வீழ்த்த, ருமேனியாவின் ஜாக்குலின் கிறிஸ்டியன் 6-2, 6-3 என்ற செட்களில் ரஷியாவின் அலினா சரேவாவை சாய்த்தாா்.

ஸ்விஸ் இண்டோா்ஸ்: சுவிட்ஸா்லாந்தில் நடைபெறும் ஆடவருக்கான ஸ்விஸ் இண்டோா்ஸ் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில், குரோஷியாவின் மரின் சிலிச் 7-6 (11/9), 7-5 என்ற செட்களில், பெல்ஜியத்தின் டேவிட் காஃபினை வீழ்த்தினாா்.

அமெரிக்காவின் ரெய்லி ஒபெல்கா 6-3, 6-4 என்ற கணக்கில், ஆா்ஜென்டீனாவின் செபாஸ்டியன் பேஸை வெளியேற்ற, பிரேஸிலின் ஜாவ் ஃபொன்சேகா 7-6 (8/6), 6-3 என பிரான்ஸின் ஜியோவனி பெரிகாா்டை வீழ்த்தினாா்.

X
Dinamani
www.dinamani.com