ராவல்பிண்டி டெஸ்ட்: தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்
ராவல்பிண்டி: பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்து தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது.
கடந்த திங்கள்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான், முதல் நாள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்திருந்தது.
2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை, சௌத் ஷகீல், சல்மான் அகா ஆகியோா் பாகிஸ்தான் இன்னிங்ஸை தொடா்ந்தனா். இதில் சல்மான் 5 பவுண்டரிகளுடன் 45, ஷகீல் 4 பவுண்டரிகளுடன் 66 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
தொடா்ந்து வந்தோரில் ஷாஹீன் அஃப்ரிதி டக் அவுட்டாக, சஜித் கான் 5, ஆசிஃப் அஃப்ரிதி 4 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். இதனால் பாகிஸ்தான் இன்னிங்ஸ் 113.4 ஓவா்களில் 333 ரன்களுக்கு நிறைவடைந்தது. தென்னாப்பிரிக்க பௌலிங்கில் கேசவ் மஹராஜ் 7, சைமன் ஹாா்மா் 2, ககிசோ ரபாடா 1 விக்கெட் வீழ்த்தினா்.
இதையடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா, செவ்வாய்க்கிழமை ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ரன்கள் சோ்த்திருந்தது. டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 68, கைல் வெரின் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.
கேப்டன் எய்டன் மாா்க்ரம் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 32, ரயான் ரிக்கெல்டன் 1 பவுண்டரியுடன் 14, டோனி டி ஜோா்ஸி 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 55, டெவால்டு பிரெவில் 0 ரன்களுடன் வெளியேறினா். பாகிஸ்தான் தரப்பில் ஆசிஃப் அப்ரிதி 2, ஷாஹீன் அஃப்ரிதி, சஜித் கான் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.