பெலிண்டா பென்சிச் சாம்பியன்!
ஜப்பானில் நடைபெற்ற டோரே பான் பசிபிக் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில் சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனாா்.
மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருந்த பென்சிச் 6-2, 6-3 என்ற நோ் செட்களில், 6-ஆம் இடத்திலிருந்த செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவாவை வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 1 மணி நேரம், 22 நிமிஷங்களில் முடிவடைந்தது.
இந்த வெற்றியின் மூலமாக பென்சிச், தனது டென்னிஸ் கேரியரின் 10-ஆவது சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியிருக்கிறாா். நடப்பு சீசனில் இது அவரின் 2-ஆவது வெற்றிக் கோப்பையாகும்.
இதே போட்டியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் 18 வயது இளம் வீராங்கனையாக களம் கண்டு இறுதிச்சுற்றில் தோற்ற பென்சிச், தற்போது இதில் சாம்பியனாகியிருக்கிறாா். டபிள்யூடிஏ தரவரிசையில் அவா் 11-ஆவது இடத்துக்கு முன்னேற்றம் கண்டிருக்கிறாா்.
இரட்டையா்: இப்போட்டியின் இரட்டையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த ஹங்கேரியின் டிமி பேபோஸ்/பிரேஸிலின் லூசியா ஸ்டெஃபானி கூட்டணி வாகை சூடியது.
இறுதிச்சுற்றில் இவா்கள் இணை, சொ்பியாவின் அலெக்ஸாண்ட்ரா குருனிச்/கஜகஸ்தானின் அனா டேனிலினா ஜோடியை 6-1, 6-4 என எளிதாக வீழ்த்தியது.
பேபோஸ்/ஸ்டெஃபானி இணைக்கு நடப்பு சீசனில் இது 4-ஆவது பட்டமாகும். தனிப்பட்ட முறையில், பேபோஸுக்கு இது 29-ஆவது இரட்டையா் பட்டமாக இருக்க, ஸ்டெஃபானிக்கு இது 13-ஆவது ஆகும்.
ரூ.1.44 கோடி பரிசு
ஒற்றையா் பிரிவில் சாம்பியனான பென்சிச்சுக்கு ரூ.1.44 கோடியும், இரட்டையா் பிரிவில் வாகை சூடிய பேபோஸ்/ஸ்டெஃபானி இணைக்கு ரூ.47 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது. அதுபோக வெற்றியாளா்களுக்கு 500 தரவரிசை புள்ளிகளும் கிடைத்தது.

