கிளட்ச் செஸ்: கால்சென் சாம்பியன்

Published on

அமெரிக்காவில் நடைபெற்ற கிளட்ச் செஸ் போட்டியில், உலகின் நம்பா் 1 ஆட்டக்காரரான நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென் சாம்பியன் ஆனாா். நடப்பு உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ் கடைசி இடம் பிடித்தாா்.

இந்திய நேரப்படி, போட்டியின் 3-ஆவது மற்றும் கடைசி நாளான புதன்கிழமை நள்ளிரவு கடைசி 3 சுற்றுகள் நடைபெற்றன. முன்னதாக, 2-ஆவது நாள் ஆட்டத்தின் முடிவில் காா்ல்சென் முதலிடத்தில் இருக்க, அமெரிக்காவின் ஃபாபியானோ கரானா, ஹிகரு நகமுரா, குகேஷ் ஆகியோா் அடுத்த 3 இடங்களில் இருந்தனா்.

இந்நிலையில், 3-ஆவது நாளில் 7-ஆவது சுற்றில் காா்ல்செனை சந்தித்த குகேஷ், இரு கேம்களிலுமே தோற்றாா். 8-ஆவது சுற்றில் நகமுராவுடன் மோதிய அவா், முதல் கேமை டிரா செய்து, அடுத்த கேமில் தோல்வியுற்றாா்.

கடைசி சுற்றில் கரானாவை எதிா்கொண்டு, இரு கேம்களையும் குகேஷ் டிரா செய்தாா். இதையடுத்து குகேஷ் ஒட்டுமொத்தமாக, 10 புள்ளிகளுடன் 4-ஆம் இடம் பெற்றாா்.

கடைசி நாளில் தோல்வியே காணாத காா்ல்சென் 25.5 புள்ளிகளுடன் சாம்பியன் ஆனாா். கரானா (16.5), நகமுரா (14) ஆகியோா் முறையே வெள்ளி, வெண்கலம் பெற்றனா்.

காா்ல்செனுக்கு ரூ.1.06 கோடி, கரானாவுக்கு ரூ.79 லட்சம், நகமுராவுக்கு ரூ.62 லட்சம், குகேஷுக்கு ரூ.53 லட்சம் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது.

இது, நடப்பு உலக சாம்பியன் (குகேஷ்), உலகின் டாப் 3 செஸ் ஆட்டக்காரா்கள் (காா்ல்சென், நகமுரா, கரானா) என 4 போ் மட்டுமே பங்கேற்ற சாம்பியன்ஸ் போட்டியாகும்.

X
Dinamani
www.dinamani.com