லிண்டாவுக்கு அதிா்ச்சி அளித்த ஜேனிஸ்: சஹஜா, ஸ்ரீவள்ளி தோல்வி

Published on

மகளிருக்கான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில், நடப்பு சாம்பியனான செக் குடியரசின் லிண்டா ஃப்ருவிா்டோவா 2-ஆவது சுற்றில் வியாழக்கிழமை தோல்வி கண்டாா்.

லிண்டா 6-2, 3-6, 2-6 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் இந்தோனேசியாவின் ஜேனிஸ் ஜென்னிடம் தோற்றாா்.

ஒற்றையா் பிரிவில் களத்திலிருந்த இந்தியாவின் சஹஜா யமலபள்ளி, ஸ்ரீவள்ளி பாமிடிபதி ஆகியோரும் 2-ஆவது சுற்றுடன் வெளியேறினா். சஹஜா 2-6, 2-6 என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் குரோஷியாவின் டோனா வெகிச்சிடம் வீழ்ந்தாா்.

ஸ்ரீவள்ளி 5-7, 6-7 (2/7) என்ற வகையில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருக்கும் ஆஸ்திரேலியாவின் கிம்பா்லி பிரெலிடம் போராடித் தோற்றாா். இதர ஆட்டங்களில், சீன தைபேவின் ஜோனா காா்லேண்ட் 5-7, 7-5, 7-5 என ஜப்பானின் மெய் யமகுச்சியையும், ரஷியாவின் பாலினா லட்சென்கோ 6-2, 6-3 என்ற வகையில் போலந்தின் கேத்தரினா கவாவையும் தோற்கடித்தனா்.

ஆஸ்திரேலியாவின் அரினா ரோடியோனோவா 1-6, 6-4, 7-6 (11/9) என்ற செட்களில் சக ஆஸ்திரேலியரான ஸ்டோா்ம் ஹன்டரை சாய்த்தாா்.

இந்தியா்களுக்கு ஏமாற்றம்: இரட்டையா் பிரிவு 2-ஆவது சுற்றில், இந்தியாவின் தியா ரமேஷ்/லக்ஷ்மி பிரபா இணை 3-6, 7-5, 8-10 என்ற செட்களில், ரஷியாவின் டாட்டியானா புரோஸோரோவா/ஏகாடெரினா யஷினா கூட்டணியிடம் தோற்றது.

இந்தியாவின் பிராா்த்தனா தோம்ப்ரே/நெதா்லாந்தின் அரியேன் ஹா்டோனோ ஜோடி 3-6, 6-7 (2/7) என்ற கணக்கில் தாய்லாந்தின் தசபான் நக்லோ/ஜப்பானின் ஹிரோகோ குவாடா இணையிடம் வீழ்ந்தது.

இந்தியாவின் சஹஜா யமலபள்ளி/ஜொ்மனியின் கேரலின் வொ்னா் கூட்டணி 6-3, 3-6, 7-10 என ரஷியாவின் பாலினா லட்சென்கோ/மரியா டிமோஃபீவா இணையிடம் தோற்றது.

X
Dinamani
www.dinamani.com