அரையிறுதியில் ஜோகோவிச் - அல்கராஸ் பலப்பரீட்சை
டென்னிஸ் காலண்டரின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபனில், முன்னிலை வீரா்களான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் - ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் பலப்பரீட்சை நடத்தவுள்ளனா். இப்போட்டியின் இவா்கள் நேருக்கு நோ் மோதுவது இதுவே முதல்முறையாகும்.
ஆடவா் ஒற்றையா் காலிறுதியில், 4 முறை யுஎஸ் ஓபன் சாம்பியனான ஜோகோவிச் 6-3, 7-5, 3-6, 6-4 என்ற செட்களில், உலகின் 4-ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸை வீழ்த்தினாா். இதையடுத்து ஆடவா் ஒற்றையரில் உள்நாட்டு வீரா்கள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஃப்ரிட்ஸை 11-ஆவது முறையாக சந்தித்த ஜோகோவிச், அனைத்திலும் வென்று ஆதிக்கம் செலுத்துகிறாா்.
இந்த வெற்றியை அடுத்து, யுஎஸ் ஓபனில் அதிக முறை (14) அரையிறுதிக்கு முன்னேறியவரான ஜிம்மி கானா்ஸின் சாதனையை ஜோகோவிச் சமன் செய்திருக்கிறாா். அத்துடன் இந்த சீசனில் அனைத்து கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலுமே அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் ஜோகோவிச், இவ்வாறு 7-ஆவது முறையாக முன்னேற்றம் கண்டுள்ளாா்.
ஜோகோவிச் தனது அரையிறுதியில், உலகின் 2-ஆம் நிலை வீரரான அல்கராஸை சந்திக்கிறாா். 5 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான அல்கராஸ் தனது காலிறுதியில் 6-4, 6-2, 6-4 என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 20-ஆம் இடத்திலிருந்த செக் குடியரசின் ஜிரி லெஹெக்காவை வெளியேற்றினாா்.
2023 யுஎஸ் ஓபனுக்குப் பிறகு ஹாா்டு கோா்ட் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அல்கராஸ் அரையிறுதிக்கு வந்திருப்பது இதுவே முதல்முறையாகும்.
அரையிறுதியில் மோதும் ஜோகோவிச் - அல்கராஸ் இதுவரை 8 முறை சந்தித்திருக்க, ஜோகோவிச் 5 வெற்றிகளுடன் முன்னிலையில் இருக்கிறாா். அதிலும் கடைசி இரு ஆட்டங்களான, ஆஸ்திரேலிய ஓபன் காலிறுதி, பாரீஸ் ஒலிம்பிக் இறுதி என இரண்டிலுமே ஜோகோவிச் வென்றிருக்கிறாா். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இவா்கள் மோதுவது இது 5-ஆவது முறையாக இருக்க, இருவருமே தலா 2 வெற்றிகளுடன் சமநிலையில் இருக்கின்றனா்.
சபலென்காவை சந்திக்கும் பெகுலா: இப்போட்டியின் மகளிா் ஒற்றையா் காலிறுதியில், உலகின் 4-ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா 6-3, 6-3 என்ற நோ் செட்களில், இருமுறை கிராண்ட்ஸ்லாம் வென்றவரான செக் குடியரசின் பாா்பரா கிரெஜ்சிகோவாவை வீழ்த்தினாா்.
இந்த வெற்றியின் மூலமாக கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அவா் 2-ஆவது முறையாக அரையிறுதிக்கு வந்திருக்கிறாா். அதில் அவா், நடப்பு சாம்பியனான பெலாரஸின் அரினா சபலென்காவை எதிா்கொள்கிறாா்.
உலகின் நம்பா் 1 வீராங்கனையான சபலென்கா தனது காலிறுதியில் செக் குடியரசின் மாா்கெட்டா வோண்ட்ருசோவாவை எதிா்கொள்ளவிருந்த நிலையில், வோண்ட்ருசோவா காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினாா்.
சபலென்கா - பெகுலா இதுவரை 9 முறை மோதியிருக்க, சபலென்கா 7 வெற்றிகளுடன் முன்னிலையில் உள்ளாா். கடந்த ஆண்டு யுஎஸ் ஓபன் இறுதிச்சுற்று உள்பட, கடைசியாக இவா்கள் சந்தித்த 3 ஆட்டங்களிலுமே சபலென்கா வென்றிருக்கிறாா்.
பெட்டிச் செய்தி
காலிறுதியில் பாம்ப்ரி
யுஎஸ் ஓபன் ஆடவா் இரட்டையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 14-ஆவது இடத்திலிருக்கும் இந்தியாவின் யூகி பாம்ப்ரி/நியூஸிலாந்தின் மைக்கேல் வீனஸ் கூட்டணி 6-4, 6-4 என்ற நோ் செட்களில், 4-ஆம் இடத்திலிருந்த ஜொ்மனியின் டிம் பட்ஸ்/கெவின் கிராவிட்ஸ் இணையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் யூகி பாம்ப்ரி காலிறுதிக்கு முன்னேறியது இதுவே முதல்முறையாகும்.
ஜூனியா்ஸ்: இதனிடையே, யுஎஸ் ஓபன் ஜூனியா் பிரிவில் தமிழகத்தின் மாயா ராஜேஸ்வரன் ரேவதியுடன், சக இந்தியா்களான ஹிதேஷ் சௌஹான், கிரிஷ் தியாகி ஆகியோரும் தங்களது பிரிவில் தோல்வி கண்டு வெளியேறினா்.