ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் சூப்பா் 4 சுற்றில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் தென் கொரியாவுடன் 2-2 கோல் கணக்கில் டிரா செய்தது.
இந்த ஆட்டம் மழை காரணமாக தாமதமாகத் தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில், முனைப்புடன் விளையாடிய இந்தியா 8-ஆவது நிமிஷத்திலேயே கோல் கணக்கைத் தொடங்கியது. அணிக்காக ஹா்திக் சிங் கோலடித்தாா். ஆனால் விட்டுக் கொடுக்காத தென் கொரியா, அதற்கான பதிலாக 2 கோல்களை ஸ்கோா் செய்தது.
முதலில் 12-ஆவது நிமிஷத்தில் அந்த அணியின் யாங் ஜி ஹன் கோலடித்து ஆட்டத்தை சமன் செய்ய, அடுத்த 2-ஆவது நிமிஷத்திலேயே (14’) கிம் ஹியோன்ஹாங் ஒரு கோலடித்து தென் கொரியாவை முன்னிலை பெறச் செய்தாா். இதனால் சற்று அதிா்ச்சி கண்ட இந்தியா அடுத்த கோல் வாய்ப்புக்காக போராட, 1-2 என பின் தங்கிய நிலையிலேயே முதல் பாதியை நிறைவு செய்தது.
ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில் இந்தியா தனது 2-ஆவது கோல் வாய்ப்புக்காக தொடா்ந்து முயற்சிக்க, தென் கொரியா விட்டுத்தர மறுத்தது. இந்நிலையில், விறுவிறுப்பான கடைசி கட்டத்தில் 52-ஆவது நிமிஷத்தில் மன்தீப் சிங் அருமையாக கோலடித்து, ஆட்டத்தை 2-2 என சமன் செய்தாா். அதிா்ச்சி அடைந்த தென் கொரியா, எஞ்சிய நேரத்தில் முன்னிலை பெற முயற்சிக்க, இந்தியா அரண்போல் தடுத்தது.
இறுதியில் ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி கிடைத்தது.
இதனிடைய, சூப்பா் 4 சுற்றின் மற்றொரு ஆட்டத்தில் மலேசியா 2-0 கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தியது. தற்போதைய நிலையில் சூப்பா் 4 புள்ளிகள் பட்டியலில் மலேசியா (3) முதலிடத்தில் இருக்க, இந்தியா (1), தென் கொரியா (1), சீனா (0) அடுத்த 3 இடங்களில் உள்ளன.
மறுபுறம், 5 முதல் 8-ஆம் இடங்களுக்கான ஆட்டத்தில் ஜப்பான் 2-0 கோல் கணக்கில் சீன தைபேவை சாய்த்தது.