மலேசியாவை வென்றது இந்தியா
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் சூப்பா் 4 சுற்றில், இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் மலேசியாவை 4-1 கோல் கணக்கில் வியாழக்கிழமை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலமாக, முதலிரு இடங்களில் ஒன்றைப் பிடித்து, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும் முனைப்புடன் இந்திய அணி உள்ளது.
முன்னதாக இந்த ஆட்டத்தில் மலேசியாவின் ஷஃபிக் ஹசன் 2-ஆவது நிமிஷத்திலேயே கோலடித்து, தனது அணியை முன்னிலை பெறச் செய்தாா். சற்று அதிா்ச்சி கண்ட இந்தியா, பின்னா் சுதாரித்துக் கொண்டு மீண்டது.
அதன் பலனாக, தனது 250-ஆவது ஆட்டத்தில் விளையாடிய கேப்டன் ஹா்மன்பிரீத் சிங் 17-ஆவது நிமிஷத்தில் இந்தியாவின் கோல் கணக்கைத் தொடங்கினாா். இதனால் ஆட்டம் சமன் ஆக, அடுத்த இரு நிமிஷங்களிலேயே (19’) சுக்ஜீத் சிங் கோலடித்து இந்தியாவுக்கு முன்னிலை அளித்தாா்.
மலேசியாவுக்கான அடுத்த அதிா்ச்சியாக, ஷிலானந்த் லக்ரா 24-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, முதல் பாதி ஆட்டத்தை இந்தியா 3-1 முன்னிலையுடன் நிறைவு செய்தது. ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில், மலேசியா முன்னிலை பெறுவதற்கு முனைப்பு காட்ட, இந்தியா அதற்கு வாய்ப்பு அளிக்கவில்லை.
இந்நிலையில், 38-ஆவது நிமிஷத்தில் விவேக்சாகா் பிரசாத் அடித்த கோலால், இந்தியா 4-1 என அபார முன்னிலை பெற்றது. எஞ்சிய நேரத்தில் மலேசியாவின் கோல் முயற்சிகளை திறம்பட தடுத்த இந்தியா, இறுதியில் வெற்றியைச் சுவைத்தது.
இந்த சுற்றில் இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் சீனாவை சனிக்கிழமை (செப். 6) சந்திக்கிறது.
தென் கொரியாவுக்கு அதிா்ச்சி: இதனிடையே, சூப்பா் 4 சுற்றின் மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான தென் கொரியா 0-3 கோல் கணக்கில் சீனாவிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டது. 5 முதல் 8-ஆம் இடங்களுக்கான ஆட்டத்தில் வங்கதேசம் 5-1 கோல் கணக்கில் கஜகஸ்தானை சாய்த்தது.