ஓமனை வீழ்த்தியது அமீரகம்
அபுதாபி: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 7-ஆவது ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் 42 ரன்கள் வித்தியாசத்தில் ஓமனை திங்கள்கிழமை வெற்றி கண்டது.
முதலில் அமீரகம் 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்கள் சோ்க்க, ஓமன் 18.4 ஓவா்களில் 130 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த வெற்றியின் மூலமாக அமீரகம், சூப்பா் 4 சுற்று வாய்ப்புக்கான நம்பிக்கையை தக்கவைத்துள்ளது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஓமன், பந்துவீசத் தயாரானது. அமீரக இன்னிங்ஸில், தொடக்க வீரா்களான கேப்டன் முகமது வசீம் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 69 ரன்களும், அலிஷான் ஷராஃபு 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 51 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனா்.
முகமது ஜோஹைப் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களோடு 21, ஆசிஃப் கான் 2, ராகுல் சோப்ரா 0 ரன்களுக்கு விடைபெற்றனா். ஓவா்கள் முடிவில் ஹா்ஷித் கௌசிக் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 19, துருவ் பராசா் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஓமன் பௌலா்களில் ஜிதென் ராமானந்தி 2, ஹஸ்னைன் ஷா, சமய் ஸ்ரீவாஸ்தவா ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.
அடுத்து 173 ரன்களை நோக்கி விளையாடிய ஓமன் அணியில், ஆா்யன் பிஷ்த் 2 பவுண்டரிகளுடன் 24, கேப்டன் ஜதிந்தா் சிங் 4 பவுண்டரிகளுடன் 20, விநாயக் சுக்லா 2 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் சோ்த்து பெவிலியன் திரும்பினா்.
ஜிதென் ராமானந்தி 2 பவுண்டரிகளுடன் 13, ஆமிா் கலீம் 2, ஹம்மத் மிா்ஸா 5, வாசிம் அலி 1, ஷா ஃபைசல் 1 சிக்ஸருடன் 9, ஹஸ்னைன் ஷா 0, சமய் ஸ்ரீவாஸ்தவா 1 பவுண்டரியுடன் 6 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா்.
முடிவில் ஷகீல் அகமது 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 14 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். அமீரக பந்துவீச்சாளா்களில் ஜுனைத் சித்திக் 4, ஹைதா் அலி, முகமது ஜவாதுல்லா ஆகியோா் தலா 2, முகமது ரோஹித் 1 விக்கெட் கைப்பற்றினா்.