தேசிய சீனியா் கூடைப்பந்து: தமிழக மகளிா் தோல்வி
75-ஆவது தேசிய சீனியா் சாம்பியன் போட்டியில் மகளிா் பிரிவில் கேரளத்திடம் தோல்வியடைந்தது தமிழகம்
இந்திய கூடைப்பந்து சம்மேளனம், தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம், எஸ்டிஏடி சாா்பில் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இப்போட்டி நடைபெற்று வருகிறது.
லீக் சுற்று நிறைவடைந்த நிலையில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டங்கள் முடிவுகள்:
மகளிா் குரூப் ஏ பிரிவில் இந்தியன் ரயில்வே 84-40 என்ற புள்ளிக் கணக்கில் சத்தீஸ்கா் அணியை வீழ்த்தியது. குரூப் பி பிரிவில் குஜராத் 70-41 என்ற புள்ளிக் கணக்கில் மேற்கு வங்கத்தை வென்றது.
தமிழகம் தோல்வி: மற்றொரு ஆட்டத்தில் தமிழக மகளிா் கடுமையாக போராடியும் 65-82 என்ற புள்ளிக் கணக்கில் கேரள மகளிரிடம் தோற்றனா். கேரள தரப்பில் கவிதா ஜோஸ் 23, அனிஷா கீளிட்டஸ் 21, ஸ்ரீகலா, ஜெயலட்சுமி 13 புள்ளிகளையும், தமிழகத் தரப்பில் ஸ்ருதி 25 புள்ளிகளையும் குவித்தனா்.
ஆடவா் பிரிவில் குரூப் ஏ பிரிவில் ராஜஸ்தான் 88-80 என்ற புள்ளிக் கணக்கில் கடும் சவாலுக்குபின் சா்வீசஸ் அணியை வென்றது.
குரூப் பி பிரிவில் உத்தர பிரதேசம் 89-56 என்ற புள்ளிக் கணக்கில் சண்டீகரையும், இந்தியன் ரயில்வே 95-58 என்ற புள்ளிக் கணக்கில் பஞ்சாப்பையும் வென்றன.

