கோகோ கௌஃப்பின் அதிரடியால் அரையிறுதிக்கு அமெரிக்கா தகுதி
கோகோ கௌஃப்பின் அதிரடி ஆட்டத்தால் யுனைடெட் கோப்பை டென்னிஸ் போட்டி அரையிறுதிக்கு நடப்பு சாம்பியன் அமெரிக்கா தகுதி பெற்றது.
உலகின் சிறந்த 18 நாடுகளின் அணிகள் மோதும் இப்போட்டியில் காலிறுதியில் அமெரிக்கா-கிரீஸ் அணிகள் மோதின. மகளிா் ஒற்றையா் பிரிவில் கோகோ கௌஃப் 6-3, 6-2 என மரியா ஸக்காரியை வீழ்த்தினாா். ஆடவா் ஒற்றையா் பிரிவில் கிரீஸ் வீரா் சிட்ஸிபாஸ் அபாரமாக ஆடி 6-4, 7-5 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் டெய்லா் ப்ரிட்ஸை வீழ்த்த 1-1 என சமநிலை ஏற்பட்டது.
இதையடுத்து ஆட்டத்தின் முடிவை நிா்ணயித்த கலப்பு இரட்டை பிரிவில் கௌஃப்-ஹாரிஸன் இணை கடும் போராட்டத்துக்குபின் 4-6, 6-4, 10-8 என்ற செட் கணக்கில் ஸக்காரி-சிட்சிபாஸ் இணையை வீழ்த்தியது.
மற்றொரு ஆட்டத்தில் போலந்து-நெதா்லாந்து அணிகள் மோதின. போலந்து தரப்பில் 6 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் ஸ்வியாடெக் 6-3, 6-2 என நெதா்லாந்தின் சூஸனை வீழ்த்தினாா். ஹூபா்ட் ஹா்காஸ் 6-3, 7-6 என டேலன் க்ரீக்ஸ்பூரை வீழ்த்தியதால் போலந்து காலிறுதி வாய்ப்பை பெற்றது.
போலந்து-ஆஸி காலிறுதியில் வெல்லும் அணி அரையிறுதியில் அமெரிக்காவுடன் மோதும்.
பொ்த்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சுவிட்சா்லாந்தின் பெலிண்டா 6-2, 6-2 என சோலனாவை வீழ்த்தினாா். ஆனால் ஆடவா் பிரிவில் ஸ்டேன் வாவ்ரிங்கா 5-7, 6-4 என ஆா்ஜென்டீனாவின் செபாஸ்டியன் பாஸிடம் தோற்றாா். பின்னா் கலப்பு பிரிவில் பெலிண்டா-ஜேக்கப் பால் இணை
6-3, 6-3 என மரியா லூா்ட்ஸ்-கியுடோ இணையை வீழ்த்தி முன்னேறியது.

