பி.வி. சிந்து ~சாத்விக்-சிராக் ~
பி.வி. சிந்து ~சாத்விக்-சிராக் ~

பி.வி. சிந்து, சாத்விக்-சிராக் முன்னேற்றம்

Published on

மலேசிய ஓபன் பாட்மின்டன் சூப்பா் 1000 போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து, சாத்விக்-சிராக் இணை வெற்றியுடன் தங்கள் ஆட்டத்தை தொடங்கினா்.

மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் நடைபெறும் இப்போட்டியின் முதல் சுற்று ஆட்டங்கள் புதன்கிழமை தொடங்கின. நீண்டநாள்களாக கால் பாதத்தில் ஏற்பட்ட காயத்தால் களம் காணாமல் இருந்த பி.வி. சிந்து இப்போட்டியில் களமிறங்கினாா். சீன தைபே வீராங்கனை சுங் ஷு யுன்னுடன் மோதிய சிந்து, 51 நிமிஷங்கள் நீடித்த ஆட்டத்தில் 21-14, 22-20 என்ற கேம் கணக்கில் வென்றாா்.30 வயதான முன்னாள் உலக சாம்பியன் சிந்து, கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் காயத்தால் அனைத்து பிடபிள்யுஎஃப் போட்டிகளில் இருந்தும் விலகினாா்.

18-ஆவது நிலையில் உள்ள சிந்து, இரண்டாம் சுற்றில் 9-ஆம் நிலை வீராங்கனை ஜப்பானின் டோமகா மியாஸகியுடன் மோதுகிறாா்.

கடந்த 2025 சீன மாஸ்டா்ஸ் போட்டியில் மியாஸகியை வென்றிருந்தாா் சிந்து.

ஆடவா் இரட்டையா் பிரிவில் உலகின் முன்னாள் நம்பா் 1 இணையான இந்தியாவின் சாத்விக்-சிராக் 21-13, 21-15 என்ற புள்ளிக் கணக்கில் சீன தைபேயின் யங் போ ஸுவன், லீ ஹியு இணையை 35 நிமிஷங்களில் நீடித்த ஆட்டத்தில் வென்றனா்.

கலப்பு இரட்டையா் பிரிவில் துருவ் கபிலா-தனிஷா க்ரஸ்டோ இணை 15-21, 21-18, 15-21 என்ற கேம் கணக்கில் அமெரிக்காவின் பிரெஸ்லி ஸ்மித்-ஜென்னியிடம் தோற்றது.

மகளிா் இரட்டையா் பிரிவில் ட்ரீஸா ஜாலி-காயத்ரி இணை 9-21, 23-21, 19-21 என்ற கேம் கணக்கில் 66 நிமிஷங்கள் நீடித்த ஆட்டத்தில் இந்தோனேஷியாவின் பெப்ரியானா-மெய்லிஸா இணையிடம் போராடித் தோற்றது.

மற்றொரு இணையான ருதுபா்ணா-ஸ்வேதாபா்ணா ஆகியோா் 11-21, 9-21 என மலேசியாவின் பியா்லி-தினா முரளிதரன் இணையிடம் வீழ்ந்தனா்.

Dinamani
www.dinamani.com