
இந்தோனேஷியாவில் கடந்த மாதம் 18-ஆம் தேதி தொடங்கி 16 நாள்கள் நடைபெற்ற 18-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தன. இதில் 58 விளையாட்டுகளில் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. மொத்தம் 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர். பதக்கப் பட்டியலில் சீனா 132 தங்கம், 92 வெள்ளி, 65 வெண்கலம் என மொத்தம் 289 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. ஜப்பான் (75 தங்கம், 56 வெள்ளி, 74 வெண்கலம், மொத்தம் 205) 2-ஆம் இடத்தையும், தென் கொரியா (49 தங்கம், 58 வெள்ளி, 70 வெண்கலம், மொத்தம் 177) 3-ஆம் இடத்தையும் பிடித்தன. போட்டியை நடத்திய இந்தோனேஷியா 31 தங்கம், 24 வெள்ளி, 43 வெண்கலம் என 98 பதக்கங்களுடன் 4-ஆம் இடம் பிடித்தது. பதக்கப்பட்டியலில் சிரியா ஒரே ஒரு வெண்கலப் பதக்கத்துடன் கடைசி இடத்தை (37) பிடித்தது. இந்தியா, 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் என 69 பதக்கங்களுடன் பட்டியலில் 8-ஆவது இடத்தை தக்க வைத்துக் கொண்டது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவே இந்தியாவின் அதிகபட்ச பதக்க எண்ணிக்கையாகும். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 24 வெள்ளிப் பதக்கங்கள் வெல்வதும் இதுவே முதல் முறையாகும்.
எனினும் இந்த ஆசியப் போட்டியில் கலந்துகொண்ட நாடுகளில், 9 நாடுகள் ஒரு பதக்கமும் பெறாமல் வெறுங்கையுடன் திரும்பியுள்ளன.
வங்கதேசம், பூடான், புருனேய் தருஸ்ஸலம், மாலத்தீவு, ஓமன், பாலஸ்தீனம், இலங்கை, திமோர் லெஸ்தி, யேமன்.
வங்கதேச அணி 117 வீரர்களை இந்த ஆசியப் போட்டிக்கு அனுப்பியது. தடகளம், பளு தூக்குதல், 3x3 கூடைப்பந்து, பீச் கைப்பந்து, பிரிட்ஜ், படகுப்போட்டி, கோல்ப், மல்யுத்தம், ஹாக்கி, கபடி, துப்பாக்கிச் சுடுதல், வில்வித்தை, நீச்சல், கால்பந்து போன்ற விளையாட்டுகளில் வங்கதேச வீரர்கள் ஈடுபட்டாலும் அவர்களால் ஒரு பதக்கத்தையும் பெறமுடியவில்லை. இதேபோல இலங்கையும் 172 வீரர்களை அனுப்பியும் ஒரு பலனும் இல்லாமல் போனது.
ஒரு பதக்கமும் பெறாத நாடுகள் அனுப்பிய வீரர்களின் எண்ணிக்கை
இலங்கை - 172 வீரர்கள்
வங்கதேசம் - 117 வீரர்கள்
மாலத்தீவு - 116 வீரர்கள்
திமோர் லெஸ்தி - 67 வீரர்கள்
ஓமன் - 46 வீரர்கள்
பாலஸ்தீனம் - 46 வீரர்கள்
யேமன் - 37 வீரர்கள்
பூடான் - 24 வீரர்கள்
புருனேய் தருஸ்ஸலம் - 15 வீரர்கள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.