உலகக் கோப்பையை வெல்வோம் என்கிற நம்பிக்கை உள்ளது: வங்கதேசத்துக்கு எதிரான தோல்விக்குப் பிறகு தெ.ஆ. கேப்டன்!

முடியாது என நினைத்தால் நான் தென் ஆப்பிரிக்க வீரனாக இருக்கமாட்டேன்...
உலகக் கோப்பையை வெல்வோம் என்கிற நம்பிக்கை உள்ளது: வங்கதேசத்துக்கு எதிரான தோல்விக்குப் பிறகு தெ.ஆ. கேப்டன்!

பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்காவை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது வங்கதேசம். இரு அணிகள் இடையிலான ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை ஆட்டம் லண்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் ஆடிய வங்கதேசம் 330/6 ரன்களைக் குவித்தது. பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 309/8 ரன்களை மட்டுமே எடுத்துத் தோல்வியடைந்தது.

ஆட்டத்துக்குப் பிறகு தென் ஆப்பிரிக்க கேப்டன் டூ பிளெஸ்ஸி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இன்னமும் எங்களால் இந்த உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்கிற நம்பிக்கை உள்ளது. முடியாது என நினைத்தால் நான் தென் ஆப்பிரிக்க வீரனாக இருக்கமாட்டேன். அணியின் உற்சாகத்தை மீட்பது எப்படி எனப் பார்க்கவேண்டும். அடுத்த ஆட்டம் இந்தியாவுக்கு எதிராக. அவர்களுக்கு அது முதல் ஆட்டம், எங்களுக்கு மூன்றாவது ஆட்டம். தற்போதைய நிலையில் நாங்கள் சரியாக விளையாடவில்லை. அதை எப்படி மாற்றவேண்டும் எனப் பார்க்கவேண்டும்.

உலகக் கோப்பைப் போட்டியில் பலமான அணிகள்தான் போட்டிபோடும். அதை எதிர்கொண்டு தான் நாம் வெல்லவேண்டும். வேறு வழியில்லை. நாங்கள் துவண்டு விடமாட்டோம். அதை உறுதியாகக் கூறமுடியும். 

மிகவும் ஆக்ரோஷமாக விளையாடவேண்டும் என்று முதலில் நினைத்தோம். ஆனால் லுங்கி என்கிடிக்குக் காயம் ஏற்பட்டவுடன் நிலைமை மாறிவிட்டது. இதனால் 15 முதல் 20 ஓவர்களைச் சுழற்பந்துவீச்சாளர்களையும் மிதமான வேகப்பந்துவீச்சாளர்களையும் கொண்டு முடிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

முக்கிய வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டுள்ளதால் முதன்மையான திட்டம் போய்விட்டது. அடுத்தத் திட்டத்தைச் செயல்படுத்தவேண்டும். இதுபோன்று விளையாடி, அதற்குச் சாக்குப்போக்குகள் சொல்லிவிடலாம் என எந்த ஒரு வீரராவது நினைத்தால் அவர்கள் சவாலைச் சந்திக்க நேரிடும் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com