அணியில் இடம்பெறாத வீரர்களை செய்தியாளர் சந்திப்புக்கு அனுப்பிய இந்திய அணி: பேச மறுத்த செய்தியாளர்கள்!

அணியில் உள்ள வீரர்கள் யாரும் செய்தியாளர் சந்திப்புக்கு வரவில்லையா என்று செய்தியாளர்கள் தரப்பில் கேட்கப்பட்டது...
அணியில் இடம்பெறாத வீரர்களை செய்தியாளர் சந்திப்புக்கு அனுப்பிய இந்திய அணி: பேச மறுத்த செய்தியாளர்கள்!

12-வது ஒருநாள் உலகக் கோப்பை போட்டி இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வருகிறது. தொடக்க |ஆட்டத்தில் இங்கிலாந்திடம்104 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற தென்னாப்பிரிக்கா, இரண்டாவது ஆட்டத்தில் வங்கதேசத்திடமும் 21 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. இந்நிலையில் பட்டம் வெல்லும் அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்டுள்ள இந்தியாவுடன் நாளை மோதவுள்ளது.

இந்நிலையில் செளதாம்ப்டனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சர்ச்சைக்குரிய சம்பவம் ஒன்று நடைபெற்றது. 

உலகக் கோப்பையில் முதல் ஆட்டம் விளையாடுவதற்கு முன்பு 9 அணிகளின் கேப்டன்கள், பயிற்சியாளர்கள், வீரர்கள் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்கள். ஆனால் இந்திய அணி மட்டும் இதில் விதிவிலக்காக இருக்க நினைத்து சர்ச்சையில் சிக்கியுள்ளது. மே 28 அன்று வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்துக்குப் பிறகு இந்திய அணியைச் சேர்ந்த யாரும் பத்திரிகையாளர்களிடம் பேசவில்லை. திங்கள் வரை இந்திய அணி நான்கு நாள்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. ஒருமுறை கூட இந்திய அணி வீரர்கள் செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை.

நேற்று, இந்திய அணி சார்பாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் இந்தியாவுக்கான உலகக் கோப்பை அணியில் இடம்பெறாத வலைப்பயிற்சி பந்துவீச்சாளர்களாக இங்கிலாந்துக்கு வந்துள்ள தீபக் சஹாரும் அவேஷ் கானும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் செய்தியாளர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.

இந்தியாவின் முதல் ஆட்டத்துக்கு இருநாள்கள் முன்பு இவர்களிடம் செய்தியாளர்கள் என்ன கேள்வி கேட்கமுடியும்? 

அணியில் உள்ள வீரர்கள் யாரும் செய்தியாளர் சந்திப்புக்கு வரவில்லையா என்று செய்தியாளர்கள் தரப்பில் கேட்கப்பட்டது. இந்திய அணி உலகக் கோப்பைப் போட்டியில் ஓர் ஆட்டத்திலும் விளையாடாததால் இந்திய அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோருக்குச் செய்தியாளர்களிடம் சொல்ல எதுவுமில்லை என்று இந்திய அணித் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

அப்படியா, எங்களுக்கும் இவர்களிடம் கேட்க எதுவுமில்லை என்று செய்தியாளர்கள் கிளம்பிவிட்டார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com